ஆன்லைன் கேமிங்கில் கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு: மக்கள் கேம்களுக்கு அடிமையாவதை தடுக்க இந்திய அரசு திட்டம்
ஆன்லைன் கேமிங்கில் நேரம் மற்றும் செலவின வரம்புகள் உட்பட கடுமையான விதிமுறைகளை அறிமுகப்படுத்த இந்திய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. முதன்மையாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே பரவலாக காணப்படும் கேமிங் அடிமைத்தனம் குறித்த கவலைகளை நிவர்த்தி செய்வதற்காக இந்த நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சீனாவில் நடைமுறையில் இருக்கும் கேமிங் கட்டுப்பாடுகளை ஒத்த இந்த புதிய திட்டம், சமீபத்திய கூட்டத்தின் போது, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்குள்(MeitY) குறிப்பிடத்தக்க ஆதரவைப் பெற்றது.
இந்தியாவின் வளர்ந்து வரும் கேமிங் சந்தைக்கு கட்டுப்பாடுகள்
தற்போது 570 மில்லியன் செயலில் உள்ள கேமர்களை கொண்ட உலகின் மிகப்பெரிய கேமிங் சந்தைகளில் ஒன்று இந்தியாவாகும். இந்த கேமர்களில் தோராயமாக 25% பேர் உண்மையான பணத்தை செலுத்தி கேமிங் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்திய அரசால் முன்மொழியப்பட்ட விதிமுறைகள் கேமிங் செயல்பாடுகளின் கால அளவு மற்றும் ஒரு வீரர் அவற்றுக்காக செலவிடும் பணத்தின் அளவு ஆகிய இரண்டையும் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் இந்த புதிய அணுகுமுறையானது, கேமிங்கின் விதிமுறைகளை தீர்மானிக்க சுய-ஒழுங்குமுறை அமைப்புகளை (SROs) மட்டுமே நம்பியிருப்பதில் இருந்து விலகுவதைக் குறிக்கிறது. முன்மொழியப்பட்ட விதிமுறைகளுக்கு கேமிங் நிறுவனங்கள் பொறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும், கேமர்கள் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளை கடைபிடிப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.