Loading...
இணைய உலகையே உலுக்கிய eMudhra சான்றிதழ் பிழை! ஆப்பிள், கூகுள் அவசர நடவடிக்கை
eMudhra சாவிகள் மிகவும் பலவீனமாக இருந்தது இணைய பாதுகாப்பு வல்லுநர்களிடையே பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது

இணைய உலகையே உலுக்கிய eMudhra சான்றிதழ் பிழை! ஆப்பிள், கூகுள் அவசர நடவடிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Oct 21, 2026
02:18 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் பிரபல சான்றிதழ் வழங்கும் நிறுவனமான eMudhra வழங்கிய 8 இடைநிலை சான்றிதழ்களின் பிரைவேட் சாவிகள் மிகவும் பலவீனமாக இருந்தது இணைய பாதுகாப்பு வல்லுநர்களிடையே பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 17 அன்று Wayne என்ற பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் இந்த பலவீனமான சாவிகளைக் கண்டறிந்து எச்சரித்தார். வழக்கமாக டிஜிட்டல் சான்றிதழ்களின் பிரைவேட் சாவிகள் 384 பிட்கள் அளவிலான கடினமான எண்களால் உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால், ஈமுத்ராவின் இந்தச் சான்றிதழ்கள் வெறும் 3 முதல் 8 பிட்கள் மட்டுமே கொண்டிருந்தன. இதன் மூலம் ஹேக்கர்கள் எந்தவொரு இணையதளத்திற்கும் போலி சான்றிதழ்களை உருவாக்கி, பயனர்களின் கடவுச்சொற்கள் மற்றும் வங்கி விவரங்களைத் திருட முடியும் என்பது நிரூபிக்கப்பட்டது.

பாதிப்பு

'ஹார்ட்ப்ளீட்' விட பெரிய பாதிப்பு?

Go புரோகிராமிங் மொழியின் பொறியாளர் பிலிப்போ வால்சார்டா கூறுகையில், 2014-இல் ஏற்பட்ட புகழ்பெற்ற Heartbleed வைரஸ் பாதிப்பை விடவும் இந்த ஈமுத்ரா சான்றிதழ் கோளாறை சரிசெய்வது மிகப்பெரிய சவாலாக இருக்கும் எனக் கவலை தெரிவித்துள்ளார்.

பிரௌசர் புதுப்பிப்புகள் உடனடியாக நடந்தாலும், லினக்ஸ் அமைப்புகள் மற்றும் ஸ்மார்ட் ஹோம் IoT சாதனங்களில் இதனை முழுமையாகச் சரிசெய்ய நீண்ட காலம் பிடிக்கும்.

நடவடிக்கை

ஆப்பிள், கூகுள், மொஸில்லா நிறுவனங்களின் அதிரடி ஆக்ஷன்

இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் மின்னல் வேகத்தில் செயல்பட்டுள்ளன.

ஆப்பிள், கூகுள், மொஸில்லா நிறுவனங்கள் தங்களது சஃபாரி, குரோம் மற்றும் ஃபயர்ஃபாக்ஸ் ப்ரவுசர்களில் பாதிக்கப்பட்ட ஈமுத்ரா சான்றிதழ்களை உடனடித் தடைகளின் மூலம் முடக்கியுள்ளன.

கிளவ்ட்ஃபிளேர் தனது 1.1.1.1 WARP ஆப் மற்றும் நெட்வொர்க்கில் அவசரப் பாதுகாப்பு மாற்றங்களைச் செய்துள்ளது.

மேலும் 'கோ' மொழியின் பதிப்புகள் 1.27.3 மற்றும் 1.26.10 ஆகியவற்றில் அவசர மென்பொருள் அப்டேட்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தற்போது வரை இந்த பலவீனமான சாவிகளைப் பயன்படுத்தி எந்தவொரு ஹேக்கிங் சம்பவங்களும் நடைபெறவில்லை என்பது ஆறுதல் தரும் செய்தி என்றாலும், பயனர்கள் தங்களது ப்ரவுசர்கள் மற்றும் மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டம்களை உடனுக்குடன் புதுப்பித்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ADVERTISEMENT