இனி படங்களை சுலபமாக எடிட் செய்யலாம்! எலான் மஸ்க்கின் எக்ஸ்ஏஐயின் இமேஜின் இமேஜ் 2.0 அறிமுகம்
செய்தி முன்னோட்டம்
எலான் மஸ்க்கின் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான எக்ஸ்ஏஐ, இமேஜின் இமேஜ் 2.0 என்ற புதிய ஏஐ பட உருவாக்கத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தொழிலமுறை மற்றும் நடைமுறைப் பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய கருவி, க்ரோக் தளத்தின் குவாலிட்டி மோட் மூலம் ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு மற்றும் இணையதளத்தில் பயனர்களின் பயன்பாட்டிற்கு தற்போது கிடைக்கிறது.
போட்டி
மெட்டா மற்றும் ஓபன்ஏஐ நிறுவனங்களுக்கு போட்டி
இந்த புதிய அறிமுகத்தின் மூலம் ஓபன்ஏஐ நிறுவனத்தின் ஜிபிடி இமேஜ், மெட்டாவின் மியூஸ் மற்றும் கூகுளின் ஜெமினி சார்ந்த இமேஜ் மாடல்களுக்கு எக்ஸ்ஏஐ நிறுவனம் நேரடிப் போட்டியை ஏற்படுத்தியுள்ளது.
வெறும் கலை நயமிக்க படங்களை உருவாக்குவதுடன் நின்றுவிடாமல், அலுவலக வேலைகள் மற்றும் டிசைனிங் பணிகளுக்குப் பயன்படும் வகையில் துல்லியமான படங்களை உருவாக்கும் நோக்கில் இந்த மாடல் உருவாக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய அம்சங்கள்
துல்லியமான எழுத்துக்கள் மற்றும் புதிய எடிட்டிங் கருவிகள்
போஸ்டர்கள், பிராசென்டேஷன்கள் மற்றும் சமூக வலைதள விளம்பரங்களில் தெளிவான எழுத்துக்கள் மற்றும் டிசைன்களை உருவாக்க இந்த தொழில்நுட்பம் உதவுகிறது.
இதில் சேர்க்கப்பட்டுள்ள மேஜிக் வாண்ட் என்ற கருவி மூலம், ஒரு படத்தின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் தேர்வு செய்து எடிட் செய்ய முடியும்.
மேலும், பின்புலத்தை அகற்றுதல் மற்றும் ஒரே நேரத்தில் 5 படங்களை வைத்து எடிட் செய்யும் வசதிகளும் இதில் உள்ளன.
ஏபிஐ
டெம்ப்ளேட்கள் மற்றும் ஏபிஐ ஆதரவு
பயனர்களின் பணியை எளிதாக்கும் வகையில் தொழில்முறை புகைப்படங்கள், தயாரிப்பு படங்கள் மற்றும் கேம் அசெட்களை உருவாக்க தயார்நிலை டெம்ப்ளேட்களை எக்ஸ்ஏஐ வழங்கியுள்ளது.
தற்போது கிராக் செயலியில் மட்டுமே கிடைக்கும் இந்த சேவை, விரைவில் ஏபிஐ மூலமாக மென்பொருள் உருவாக்குநர்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பிற செயலிகளிலும் இந்த தொழில்நுட்பத்தை இணைக்க முடியும்.