LOADING...
ஓலா, ஊபருக்கு இனி டாட்டா; அமித்ஷா அறிமுகம் செய்த பாரத் டாக்ஸி; கமிஷன் கிடையாது, குறைந்த கட்டணம்

ஓலா, ஊபருக்கு இனி டாட்டா; அமித்ஷா அறிமுகம் செய்த பாரத் டாக்ஸி; கமிஷன் கிடையாது, குறைந்த கட்டணம்

எழுதியவர் Sekar Chinnappan
Feb 05, 2026
06:40 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித்ஷா இன்று (பிப்ரவரி 5, 2026), இந்தியாவின் முதல் கூட்டுறவு அடிப்படையிலான பாரத் டாக்ஸி செயலியை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு மாற்றாக, ஓட்டுநர்களின் நலன் மற்றும் பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

செயல்பாடு

இது எப்படிச் செயல்படுகிறது?

பாரத் டாக்ஸி என்பது மற்ற செயலிகளைப் போல ஒரு தனிப்பட்ட நிறுவனம் அல்ல, இது ஓட்டுநர்களால் நடத்தப்படும் ஒரு கூட்டுறவு அமைப்பாகும். ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் ஒரு சவாரியில் 20% முதல் 30% வரை கமிஷன் எடுக்கும். ஆனால், பாரத் டாக்ஸியில் ஓட்டுநர்கள் எந்த கமிஷனும் வழங்கத் தேவையில்லை. இந்தத் தளத்தில் இணையும் ஓட்டுநர்கள் வெறும் தொழிலாளர்கள் அல்ல, அவர்கள் இந்த கூட்டுறவு அமைப்பின் பங்குதாரர்கள் ஆவர். லாபத்தின் ஒரு பகுதி அவர்களுக்கு நேரடியாகப் பிரித்து வழங்கப்படும். பைக், ஆட்டோ மற்றும் கார் எனப் பயணிகளின் தேவைக்கேற்ப வாகனங்களைத் தேர்வு செய்யலாம்.

நன்மைகள்

பயணிகளுக்கான நன்மைகள்

தனியார் மொபைல் செயலிகளில் நிலவும் பல சிக்கல்களுக்கு பாரத் டாக்ஸி தீர்வாக அமையும். மழை நேரங்களிலோ அல்லது போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள நேரங்களிலோ கட்டணத்தை உயர்த்தும் சர்ஜ் பிரைசிங் இதில் கிடையாது. கமிஷன் இல்லாததால், மற்ற செயலிகளை விட 20% முதல் 30% வரை கட்டணம் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. அவசர கால உதவிக்கான SOS பட்டன், காவல் துறையுடன் ஒருங்கிணைந்த கண்காணிப்பு மற்றும் சரிபார்க்கப்பட்ட ஓட்டுநர்கள் போன்ற வசதிகள் இதில் உள்ளன.

Advertisement

விரிவாக்கம்

தற்போதைய நிலவரம் மற்றும் விரிவாக்கம்

முதற்கட்டமாக, தற்சமயம் டெல்லி-என்சிஆர் மற்றும் குஜராத் ஆகிய பகுதிகளில் இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது. குறிப்பாக 3 ஆண்டுகளுக்குள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து இடங்களிலும் பாரத் டாக்ஸி கிடைக்கும் என்று அமித் ஷா உறுதி அளித்துள்ளார். ஏற்கனவே 3 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுநர்கள் மற்றும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் இதில் பதிவு செய்துள்ளனர்.

Advertisement