குளிர்காலத்தில் எடை கூடுகிறது என்ற கவலையா? உங்களுக்கு உதவ சில குறிப்புகள்
குளிர் காலம் என்பது, மனிதனை பெரும்பாலும் சோம்பேறி ஆக்கும். குளிருக்கு இதமாக சூடாக கிடைக்கக்கூடிய, ருசியான உணவுகளை உண்ண வேண்டும் என்ற விருப்பம் இருக்கும், அதிகமாகவும் பலரும் சாப்பிடுவார்கள். கூடுதல் உணவு மற்றும் உடற்பயிற்சி செய்யாமல் இருக்கும் சூழலில், பலருக்கு உடல் எடை கூடிடும். ஊட்டச்சத்து நிபுணர் பூஜா மல்ஹோத்ரா, தனது இன்ஸ்டாகிராமில், குளிர்காலத்தில் எடை அதிகரிப்பதைத் தடுக்க, சில ஆரோக்கிய குறிப்புகளை பகிர்ந்துள்ளார். தண்ணீர் குடிப்பதை அதிகரிக்கவும்: குறைந்தது இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர் பரிந்துரைக்கிறார். குளிர் காலமாதலால், வெந்நீராக குடிக்கலாம். சூடான பானங்கள்: தண்ணீரைத் தவிர, கஞ்சி, மஞ்சள் பால், சூப்கள், மூலிகை தேநீர் போன்ற சூடான பானங்களையும் அதிகமாக எடுத்துக்கொள்ளலாம்.
உடல் எடை குறைய உதவும் சூரிய ஒளி
உடற்பயிற்சி முறையை தொடர்ந்து பின்பற்றவும்: குளிர்கால நாட்கள் உங்களை சோம்பேறித்தனமாக வைக்கும். எனினும், ஏதேனும் உடற்பயிற்சி செய்வதை கடைபிடிக்க வேண்டும். ஜிம்மிலோ , வீட்டிலோ, தொடர்ந்து பயற்சி மேற்கொள்ள வேண்டும். உணவில் கவனம் தேவை: குளிர்காலத்தில், சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட பலகாரங்கள், ஜங்க் உணவுகளை உண்ண நேரிடலாம். உணவுகளில் ஏராளமான பச்சை இலைக் காய்கறிகள், சிட்ரஸ் பழங்கள், கேரட், நெல்லிக்கனி போன்றவற்றை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும். சூரிய ஒளி: சூரிய ஒளி, எடை இழப்பிற்கு உதவும் என்பது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வைட்டமின் டி குறைபாடு, உங்கள் வளர்சிதை மாற்ற விகிதத்தை குறைக்கும் என்பதால், உடம்பில் சூரிய ஒளி படுமாறு பார்த்துக்கொள்ளவும் என்று நிபுணர் கூறுகிறார்.