சமையல் குறிப்பு: இந்த தீபாவளிக்கு வீட்டிலேயே அதிரசம் செய்து பாருங்கள்
தீபாவளி என்றாலே வீட்டில் புத்தாடைகளும், பட்டாசுகளும் கட்டாயம். அதோடு வீட்டில் பலகாரங்களும் அவசியம் இருக்கும். முற்காலத்தில், நம் பாட்டியும், அம்மாவும், வீட்டில் ரவா உருண்டை, லட்டு, முறுக்கு, சீடை, அதிரசம் என அடுக்கி வைப்பார்கள். ஒரு வாரத்திற்கு முன்னரே, வீட்டில் எண்ணெய் பட்சணங்கள் நிரம்பி வழியும். தற்போது அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் இளம்தலைமுறையினருக்கு பலகாரம் செய்ய நேரமும் இல்லை, செய்ய நினைத்தாலும், அந்த பக்குவத்தை அருகிலிருந்து எடுத்து கூற ஆட்களும் இல்லை. அதனால், எதற்கு வம்பு என பலரும் கடைகளில் வாங்கி விடுவார்கள். என்றாலும், தீபாவளிக்கு பலகாரம் செய்வது ஒன்றும் கம்பசூத்திரம் அன்று. இந்த தீபாவளிக்கு சூப்பரான, மொறுமொறுப்பான அதிரசம் செய்து அசத்துங்கள்.
தேவையான பொருட்கள்
அரை கிலோ பச்சரிசி 500 கிராம் வெல்லம் 5 ஏலக்காய் ஒரு துண்டு சுக்கு கால் கப் தண்ணீர் கருப்பு எள்ளு 1 ஒரு டீஸ்பூன் கால் டீஸ்பூன் நெய் எண்ணெய் பொறிக்கும் அளவு
செய்முறை
பச்சரியை நன்றாக கழுவி, சுமார் 4 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர், அந்த தண்ணீரை வடிகட்டி, துணியில் பரப்பி காயவைக்க வேண்டும். லேசாக ஈரப்பதம் இருக்கும் போது, அதனுடன், சுக்கு, ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துகொள்ளவும். அரைத்த மாவை, சலித்து தனியாக வைக்கவும். மறுபுறம், ஒரு பாத்திரத்தில் வெல்லம், தண்ணீர் சேர்த்து பாகு எடுக்க வேண்டும். இதுதான் முக்கியமான கட்டம்! பாகு நுரை திரண்டு வரும்போது, ஒரு கிண்ணத்தில் தண்ணீரை எடுத்து, அதில் பாகின் சில துளிகளை விட வேண்டும். அப்படி செய்யும்போது பாகு கரையாமல் இருக்க வேண்டும். அதோடு, அந்த துளியை உருட்டினால், அது உடையாமல், உருண்டு வரவேண்டும்.
செய்முறை
காய்ச்சிய பாகை, அரைத்த மாவுடன் சேர்த்து கிளர வேண்டும். தொடர்ந்து அதில் கருப்பு எள் தூவி, நன்றாக கிளறி,ஒரு பாத்திரத்தில் போட்டு இறுக்கமாக மூடி வைக்கவும். இந்த மாவு வெளியில் தான் இருக்க வேண்டும். மறந்தும் ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது. 3 நாட்கள் கழித்து, மாவு சரியான பதத்திற்கு புளித்திருக்கும். இப்போது ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, காய வைக்க வேண்டும். இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து, தட்டி, நடுவில் சிறு துளை போட்டு, எண்ணையில் பொரித்து எடுக்கவும். தட்டுவதற்கு, உள்ளங்கைகளிலும், விரல்களிலும் எண்ணெய் தேய்த்து கொள்ளலாம். அல்லது வாழை இலையில் தட்டி போடலாம். மீதி மாவு இருந்தால் அதை இப்போது ஃப்ரிட்ஜில் வைக்கலாம்