மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தேதி அறிவிப்பு: ஏப்ரல் 28ல் திருக்கல்யாணம்.. 29ல் தேரோட்டம்! பக்தர்களே ரெடியா?
செய்தி முன்னோட்டம்
மதுரையின் அடையாளமாகத் திகழும் உலகப்புகழ் பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரைப் பெருவிழா, வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்குகிறது. 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், தினமும் அம்மனும் சுவாமியும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். இரண்டாம் நாளான ஏப்ரல் 20ல் பூத மற்றும் அன்ன வாகனத்திலும், ஏப்ரல் 21-ல் காமதேனு வாகனத்திலும் சுவாமி உலா வருவார். ஏப்ரல் 22 ஆம் தேதி நான்காம் நாள் திருவிழாவில், தங்கப் பல்லக்கில் அம்மனும் சுவாமியும் வில்லாபுரம் பாகற்காய் மண்டகப்படியில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
திருவிழாவின் முக்கிய கட்டங்கள்
பட்டாபிஷேகம் மற்றும் திக் விஜயம்
திருவிழாவின் எட்டாம் நாளான ஏப்ரல் 26 ஆம் தேதி, அன்னை மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் நடைபெறும் நிகழ்வு மிகவும் விசேஷமானது. அன்று முதல் மதுரையின் அரசியாக மீனாட்சி ஆட்சிப் பொறுப்பேற்பதைக் குறிக்கும் வகையில் வெள்ளி சிம்மாசனத்தில் நான்கு மாசி வீதிகளிலும் உலா வருவார். அதனைத் தொடர்ந்து ஒன்பதாம் நாளான ஏப்ரல் 27ல் திக் விஜயம் நடைபெறும். இந்த நாட்களில் மாசி வீதிகள் முழுவதும் பக்தர்களின் கூட்டத்தால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.
முக்கிய நிகழ்வு
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
சித்திரைப் பெருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், ஏப்ரல் 28 ஆம் தேதி (பத்தாம் திருநாள்) நடைபெறுகிறது. அன்று காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் ரிஷப லக்னத்தில் இந்த வைபவம் அரங்கேறும். லட்சக்கணக்கான பக்தர்கள் நேரில் காணும் இந்த நிகழ்விற்காகக் கோயில் நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. திருக்கல்யாணத்தை முன்னிட்டு மதுரை நகரே மணக்கோலம் பூண்டு, பக்தர்களுக்குத் திருமண விருந்தும் வழங்கப்படும்.
தேரோட்டம்
மாசி வீதிகளில் தேரோட்டம் மற்றும் தெய்வேந்திர பூஜை
திருக்கல்யாணத்திற்கு அடுத்த நாளான ஏப்ரல் 29 ஆம் தேதி (பதினொன்றாம் திருநாள்) அதிகாலை 6.30 மணி அளவில் பிரம்மாண்டமான திருத்தேரோட்டம் நடைபெறும். பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, அலங்கரிக்கப்பட்ட தேர்களில் அம்மனும் சுவாமியும் நான்கு மாசி வீதிகளிலும் வலம் வருவார்கள். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 30 ஆம் தேதி பன்னிரண்டாம் திருநாளில் தெய்வேந்திர பூஜை மற்றும் ரிஷப வாகன உலாவுடன் மீனாட்சி அம்மன் கோயில் விழா நிறைவு பெறும்.
அட்டவணை
மதுரை சித்திரைத் திருவிழா 2026 - கால அட்டவணை
ஏப்ரல் 18 - கொடியேற்றம் (தொடக்க விழா) ஏப்ரல் 22 - தங்கப் பல்லக்கு - வில்லாபுரம் எழுந்தருளல் ஏப்ரல் 26 - அருள்மிகு மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் ஏப்ரல் 27 - திக் விஜயம் ஏப்ரல் 28 - மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஏப்ரல் 29 - திருத்தேரோட்டம் (மாசி வீதிகள்) ஏப்ரல் 30 - தெய்வேந்திர பூஜை மற்றும் விழா நிறைவு