விமான பயணிகளுக்கு அதிர்ச்சி: 60% இலவச இருக்கை ஒதுக்கீடு உத்தரவு நிறுத்திவைப்பு
செய்தி முன்னோட்டம்
விமானப் பயணிகளின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் கடந்த மார்ச் 17-ஆம் தேதி மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட ஒரு முக்கிய உத்தரவு, தற்போது அதிரடியாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விமானத்திலும் குறைந்தது 60 சதவீத இருக்கைகளை எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி பயணிகள் தேர்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற அந்த விதிமுறை, அமலுக்கு வந்த மூன்றே வாரங்களில் "மறு உத்தரவு வரும் வரை" நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஆகாசா ஏர் போன்ற விமான நிறுவனங்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பின்னணி
விமான நிறுவனங்களின் எதிர்ப்பு மற்றும் பின்னணி
பெடரேஷன் ஆஃப் இந்தியன் ஏர்லைன்ஸ் (FIA) மற்றும் ஆகாசா ஏர் ஆகியவை இந்த புதிய விதிமுறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த உத்தரவு விமானக் கட்டண அமைப்பைப் பாதிக்கும் என்றும், இந்தியாவில் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடற்ற கட்டணக் கொள்கைக்கு (Deregulated tariff regime) எதிரானது என்றும் அவை வாதிட்டன. குறிப்பாக, இருக்கை தேர்வு கட்டணத்தை ரத்து செய்தால், அந்த வருவாய் இழப்பை ஈடுகட்ட அடிப்படை விமான கட்டணத்தை உயர்த்த வேண்டியிருக்கும் என்று நிறுவனங்கள் எச்சரித்தன. இதனையடுத்தே, இந்த விவகாரத்தை விரிவாக ஆய்வு செய்ய அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
புதிய மாற்றங்கள்
தற்போதைய நடைமுறை மற்றும் புதிய மாற்றங்கள்
தற்போதைய நிலவரப்படி, இந்திய விமான நிறுவனங்கள் Web check-in செய்யும் போது இருக்கை தேர்விற்கு தனிக் கட்டணம் வசூலிக்கின்றன. ஒரு விமானத்தில் 5 முதல் 15 சதவீத இருக்கைகள் மட்டுமே கூடுதல் கட்டணமின்றி கிடைக்கின்றன. ஜன்னல் ஓர இருக்கைகள் மற்றும் முன்பக்க இருக்கைகளுக்கு அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. இருப்பினும், ஒரே PNR கீழ் பயணிப்பவர்களுக்கு அருகருகே இருக்கைகள் வழங்குவது, இசைக்கருவிகள் மற்றும் செல்லப்பிராணிகளைக் கொண்டு செல்வதற்கான வெளிப்படையான கொள்கைகள் போன்ற மார்ச் 17-ஆம் தேதியிட்ட பிற உத்தரவுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என DGCA தெரிவித்துள்ளது.
விலை உயர்வு
எரிபொருள் விலை உயர்வும் மத்திய அரசின் சலுகையும்
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக விமான எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனை சமாளிக்க, உள்நாட்டு விமானங்களுக்கான விமான எரிபொருள் (ATF) விலை உயர்வை மாதத்திற்கு 25 சதவீதமாக மத்திய அரசு கட்டுப்படுத்தியுள்ளது. இந்த நிதி நெருக்கடி மற்றும் சர்வதேச வழித்தடக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், விமான நிறுவனங்களுக்குச் சாதகமாகவே இந்த 60 சதவீத இருக்கை ஒதுக்கீடு விதிமுறை தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.