தசரா பண்டிகைக்கு ராவணனின் உருவ பொம்மையை எரிக்காத கிராமம்!
நாடு முழுவதும் நவராத்திரி கோலாகலங்கள் நிறைவடைந்துள்நிறைவடைந்துள்ளது. துர்கை அம்மனை வழிபடும் இந்த 9 நாள் விழாநாளின் இறுதியாக ராவணன் வாதம் நடைபெறும். இந்த நவராத்ரி விழாவை, வடமாநிலங்களில் தசரா என்று கூறுவர். இந்த பண்டிகை ராவணனை வதம் செய்த தினமாக கொண்டாடப்படுவதால் அன்றைய தினம் வடமாநிலங்களில் ராவணன் உருவ பொம்மையினை எரிப்பதை ஓர் மரபாக கொண்டுள்ளனர்.
பைஜ்நாத் நகரில் உள்ள மக்கள் ராவண பொம்மைகளை எரிப்பதில்லை
ஆனால் ஹிமாச்சல பிரதேசம் காங்க்ரா மாவட்டத்திலுள்ள பைஜ்நாத் நகரில் உள்ள மக்கள் மட்டும் ராவணன் உருவ பொம்மைகளை எரிப்பதில்லை. இதற்கு என்ன காரணம் என்று பார்ப்போம் வாருங்கள். ஹிமாச்சல பிரதேசம் பைஜ்நாத் நகர் சிவபெருமானுக்கென அர்ப்பணிக்கப்பட்ட ஓர் தலமாக பார்க்கப்படுகிறது. ராவணன் என்னதான் அரக்கனாக இருந்தாலும் அவன் ஓர் தீவிர சிவன் பக்தன். சிவனை நோக்கி தவமிருந்து அவன் பல வரங்களை பெற்றுள்ளதாக வரலாறு கூறுகிறது.
சிவபெருமானின் தீவிர பக்தன் ராவணன்
சிவபெருமானை ஒருவன் தவமிருந்து மகிழ்வித்து வரங்களை பெறுகிறான் என்றால் நிச்சயம் அவன் சிவனுக்கு பிடித்த ஓர் பக்தனாக தான் இருக்கமுடியும். அப்பேற்பட்ட ஓர் சிவன் பக்தனின் உருவத்தை எரிப்பது என்பது சிவனை அவமதிக்கும் ஓர் செயலாக அப்பகுதி மக்கள் கருதுகிறார்கள். இதனால் தான் இவர்கள் ராவணனின் உருவ பொம்மைகளை எரிப்பது இல்லையாம்.
தசரா பண்டிகையை கொண்டாட முயன்ற சிலர் மர்மமான முறையில் மரணம்
மேலும் சில ஆண்டுகளுக்கு முன்னர் அப்பகுதியில் சிலர் தசரா பண்டிகையினை கொண்டாட முயன்றதாகவும் அவர்கள் அடுத்த தசராவிற்கு உயிருடனே இல்லை என்றும் கூறுகிறார்கள். அவர்கள் மரணத்திற்கு சிவனின் கோபம் தான் காரணம் என்று இப்பகுதி மக்கள் நம்புகிறார்கள். இதனிடையே, வரலாற்று சிறப்புமிக்க பைஜ்நாத் சிவன் கோயில் 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகவும், இதன் தோற்றம் பிராந்திய கத்யூரி வம்சத்தின் ஆட்சியின் போது அறியப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
முழுமையாக அர்ப்பணிக்கப்பட்ட பைஜ்நாத் கோயில்
சிவனுக்காக முழுமையாக அர்ப்பணிக்கப்பட்ட இந்த பைஜ்நாத் கோயில் காங்க்ரா பள்ளத்தாக்கின் முக்கிய கோயில்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள பகுதிகளில் தசராவின் பரவலான கொண்டாட்ட முறைகளை விட உள்ளூர் மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. இங்கு நடைபெறும் திருவிழாக்கள் பூஜைகள், கோவில் சடங்குகள், மத கூட்டங்களுக்கான நேரமாகவே கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.