மருத்துவம்: இரும்பு சத்து சப்ளிமென்ட்களை மருத்துவர்கள் பரிந்துரைப்பதன் பின்னணி என்ன?
உடலின் ஆரோக்கியமான இயக்கத்திற்கு, இரும்பு சத்து அத்தியாவசியமாகிறது. இரும்பு சத்து குறைபாடு ஏற்பட்டால், உடலில் பல உறுப்புகளும் மற்றும் மனச் செயலிழப்புகள் ஏற்படலாம். குறிப்பாக, பெண்கள் ஆரோக்கியத்திற்கு இரும்பு சத்து அதிமுக்கியம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மருத்துவர்கள் பரிந்துரைப்பு இன்றி, இந்த சத்து சப்ளிமென்ட்களை எடுத்துக்கொள்வதும் ஆபத்தில் முடியும். இரும்பை சப்ளிமென்ட்களாக எடுத்துக்கொள்வதால் ஏற்படும் பல்வேறு நன்மைகளைப் பார்ப்போம். ஹீமோகுளோபினை அதிகரிக்க: இரும்பு சத்து, ஹீமோகுளோபின் உருவாக உதவுகிறது. ஹீமோகுளோபினின் செயல்பாடு, இரத்தத்தின் மூலம், ஆக்ஸிஜனைக் கொண்டு செல்வதாகும். இரத்தத்தில் இரும்புச்சத்து குறைவாகும் போது, இரத்த சோகை ஏற்படலாம். மாதவிடாய் சுழற்சியின் போது, பெண்கள் இரத்தத்தை இழப்பதால், ஆண்களை விட, பெண்களே இரத்த சோகைக்கு அதிகம் ஆளாகிறார்கள்.
இரும்பு சத்து மாத்திரை எடுத்துக்கொள்வதால், மூளையின் செயல் திறன் மேம்படும்
தடகள செயல்திறனை அதிகரிக்க: உங்கள் இரத்தத்தில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும் போது, தசைகளில் பலவீனம், மற்றும் தடகள செயல்திறன் குறைவதற்கு வழிவகுக்கும். இரும்புச் சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வதனால், உங்கள் தசை வலுப்பெறுகிறது. வலுவான தசைகள், உடலில் வலியைக் குறைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க: இரும்பு சத்து கூடுவதால், உடலில், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இரும்பு உதவுகிறது. அதோடு, சேதமடைந்த செல்கள், திசுக்கள் மற்றும் உறுப்புகளை மீட்க இரும்புசத்து உதவுகிறது. அறிவாற்றலை மேம்படுத்துகிறது: உங்கள் மூளை சரியாக செயல்பட, ஆக்ஸிஜன் தேவைப்படுவதால், இரும்புச்சத்து குறைபாடு இருந்தால், மூளைக்கு ஆக்ஸிஜன் குறைகிறது. அதனால் மூளை செயல்பாடு பாதிக்கிறது. இரும்பு சத்துகள், அறிவாற்றல் செயல்பாட்டை திறம்பட மேம்படுத்தும்.