ஊட்டியில் அதிகளவு சத்து மாத்திரைகளை சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு - 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்
தமிழகத்தில் சுகாதாரத்துறை மூலம் குழந்தைகளுக்கு இரும்புசத்து மற்றும் போலிக்ஆசிட் ஊட்டச்சத்து மாத்திரைகள் ஒரு மருத்துவ மேற்பார்வையாளர் அல்லது பள்ளி ஆசிரியர் மூலம் அளிக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் பகுதியில் நகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான உருது நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 249 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 6ம் தேதி மாத்திரைகள் கையில் கிடைத்துள்ளது. யார் அதிக மாத்திரைகளை எடுத்து கொள்கிறார்கள் என்னும் போட்டி மாணவ-மாணவிகள் இடையே ஏற்பட்டதாக தெரிகிறது. அதன்படி 8ம் வகுப்பு மாணவிகள் 4, 6 மற்றும் 7ம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்கள் அந்த மாத்திரைகளை போட்டிப்போட்டு சாப்பிட்டுள்ளார்கள். அதில் அவர்களுக்கு திடீரென வாந்தி ஏற்பட்டதோடு மயக்கம் போட்டு விழுந்துள்ளனர்.
தலைமை ஆசிரியர் மற்றும் கண்காணிப்பாளரும் ஆசிரியருமான கலைவாணி பணியிடை நீக்கம்
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் அந்த 6 மாணவ-மாணவிகளை ஊட்டி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர். மாணவிகள் ஒவ்வொருவரும் 30முதல் 60மாத்திரைகள் சாப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாணவிகள் உடல்நிலை மோசமடைந்த காரணத்தினால் மேல்சிகிச்சைக்காக அவர்களை கோவைஅரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு தீவிரச்சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சலீம் என்பவரது மகள் ஜெய்பா பாத்திமா என்னும் மாணவியின் உடல்நிலை மிகமோசமானதால் அவரை ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. சேலம் தாண்டி செல்லும்போதே திடிரென அந்த மாணவிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு பாதிவழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் முகமதுஅமீன்,மாத்திரை விநியோகிக்கும் கண்காணிப்பாளரும் ஆசியருமான கலைவாணி ஆகியோரை பணியிடைநீக்கம் செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.