Loading...
75% இன்ஃபுளூயன்ஸா மாதிரிகளில் H1N1 வைரஸ்! தமிழகம், கேரளாவில் டெங்கு பாதிப்பு உச்சம்! மருத்துவர்கள் எச்சரிக்கை
75% இன்ஃபுளூயன்ஸா மாதிரிகளில் H1N1 வைரஸ்

75% இன்ஃபுளூயன்ஸா மாதிரிகளில் H1N1 வைரஸ்! தமிழகம், கேரளாவில் டெங்கு பாதிப்பு உச்சம்! மருத்துவர்கள் எச்சரிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Oct 05, 2026
07:10 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் ஒரே நேரத்தில் டெங்கு மற்றும் எச்1என்1 இன்ஃபுளூயன்ஸா ஆகிய இரு வேறு தொற்றுநோய்கள் தீவிரமாக பரவி வருகின்றன. தென் மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் வேளையில், நாட்டின் இன்ஃபுளூயன்ஸா பரிசோதனை மாதிரிகளில் 75 சதவீத மாதிரிகளில் H1N1 வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. பருவமழை காலம் நீடித்து வரும் நிலையில், அனைத்து வகையான காய்ச்சல் அறிகுறிகளையும் பொதுமக்கள் தீவிரமாக கவனிக்க வேண்டும் என சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

டெங்கு பாதிப்பு

தென் மாநிலங்களில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்புகள்

2026 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில் இந்தியாவில் 23,952 டெங்கு பாதிப்புகளும் 31 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய 5 தென் மாநிலங்களில் மட்டும் 15,137 பாதிப்புகள் (63.2%) பதிவாகியுள்ளன.

தமிழகத்தில் அதிகபட்சமாக 7,511 பேரும், கேரளாவில் 4,458 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கேரளாவில் அதிகபட்சமாக 19 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

சென்னையில் மட்டும் 4,500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதால் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

உயிரிழப்புகள்

கேரளாவில் அதிகரிக்கும் எச்1என்1 காய்ச்சல் உயிரிழப்புகள்

உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, இந்தியாவில் இன்ஃபுளூயன்ஸா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட மாதிரிகளில் 75 சதவீதம் எச்1என்1 வைரஸால் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கேரளாவில் அக்டோபர் தொடக்கம் வரை 11,319 இன்ஃபுளூயன்ஸா பாதிப்புகளும் 120 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

இது கடந்த 2025-ஆம் ஆண்டின் மொத்த உயிரிழப்பான 43-ஐ விட மூன்று மடங்கு அதிகமாகும்.

நீடித்த மழை, ஈரப்பதம் மற்றும் பண்டிகைக் கால கூட்ட நெரிசல்களே இந்த வைரஸ் பரவலுக்கு முதன்மை காரணங்களாக சுட்டிக்காட்டப்படுகின்றன.

ADVERTISEMENT

மருத்துவ ஆலோசனை

தடுப்பு முறைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள்

டெங்கு மற்றும் இன்ஃபுளூயன்ஸா இரண்டிற்கும் காய்ச்சல், உடல் வலி போன்ற பொதுவான அறிகுறிகள் இருப்பதால் சுயமாக மருந்துகளை எடுக்கக் கூடாது.

டெங்குவைப் தடுக்க வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துத் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற வேண்டும்.

எச்1என்1 வைரஸிலிருந்து தப்பிக்க முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும் தொடர் காய்ச்சல், மூச்சுத்திணறல், அதிக பலவீனம் போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியமாகும்.

ADVERTISEMENT