தீபாவளிக்கு வீட்டை சுத்தம் செய்ய இதோ எளிய டிப்ஸ்: ஆரஞ்சு தோல் கொண்டு வீட்டிலேயே தயாரிக்கலாம் இயற்கை கிளீனிங் லிக்விட்
செய்தி முன்னோட்டம்
தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில், நமது வீட்டை சுத்தப்படுத்தும் பணியில் ஆர்வம் காட்டத் தொடங்குவோம். குறிப்பாக, சமையலறையில் உள்ள அடுப்பு, மேடை, சிங்க் மற்றும் டைல்ஸ் ஆகியவற்றில் படிந்திருக்கும் விடாப்பிடியான எண்ணெய் பிசுக்கை அகற்றுவது சற்று கடினமான வேலை. கடைகளில் கிடைக்கும் ரசாயன பொருட்களுக்குப் பதிலாக, நாம் வீணாகத் தூக்கி எறியும் ஆரஞ்சு பழத்தோலைக் கொண்டு இயற்கையான முறையில் அசத்தலான கிளீனிங் லிக்விட் தயாரிக்கலாம். ஆரஞ்சு தோலில் உள்ள 'சிட்ரஸ் ஆயில்' மற்றும் வினிகர் இணைந்து எண்ணெய் பிசுக்கையும் கறைகளையும் எளிதில் நீக்க உதவும். இந்த கலவை தயாராக சுமார் இரண்டு வாரங்கள் தேவைப்படும் என்பதால், தீபாவளி சுத்தம் செய்வதற்கு முன்கூட்டியே இதனைத் தயாரித்து வைத்துக்கொள்வது சிறந்தது.
தயாரிக்கும் முறை
இயற்கை கிளீனிங் லிக்விட் தயாரிக்கும் முறை
ஒரு கண்ணாடி ஜாரில் பாதியளவு நிரம்பும் அளவிற்கு சுத்தமான ஆரஞ்சு பழத்தோலைச் சேகரிக்கவும். (எலுமிச்சை அல்லது சாத்துக்குடி தோல்களையும் பயன்படுத்தலாம்).
தோல்களைச் சிறிய துண்டுகளாக நறுக்கினால் அதிலுள்ள எண்ணெய்கள் எளிதில் வெளிவரும்.
ஜாரில் உள்ள தோல்கள் முழுவதுமாக மூழ்கும் வரை வெள்ளை வினிகரை ஊற்றவும்.
ஜாரை இறுக்கமாக மூடி லேசாகக் குலுக்க வேண்டும்.
துருப்பிடிக்கும் உலோக மூடிகளைத் தவிர்ப்பது நல்லது.
வினிகர் ஊற்றிய ஜாரை நேரடி சூரிய ஒளி படாத குளிர்ச்சியான இடத்தில் இரண்டு வாரங்கள் வைக்கவும்.
சில நாட்களுக்கு ஒருமுறை ஜாரை மெதுவாகக் குலுக்கவும்.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு, மெல்லிய வடிகட்டி அல்லது துணி மூலம் அதைக் கட்டியாக வடிகட்டி, சம அளவு தண்ணீருடன் சேர்த்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக்கொள்ளவும்.
எச்சரிக்கை
பயன்படுத்தும் முறையும் பாதுகாப்பு எச்சரிக்கைகளும்
கலவையின் மேற்பரப்பில் பூஞ்சை தோன்றினால் பாதுகாப்புக் கருதி அதைப் பயன்படுத்தாமல் கொட்டிவிடவும்.
சமையலறை அடுப்பு, மேடை, ஸ்டீல் சிங்க் மற்றும் டைல்ஸ் மீது இந்த லிக்விட்டைத் தெளித்து ஓரிரு நிமிடங்கள் கழித்து ஈரமான துணியால் துடைக்க வேண்டும். இது கிச்சனை சுத்தமாக்குவதுடன் வீடு முழுவதும் நறுமணத்தையும் தரும்.
மார்பிள், கிரானைட் போன்ற இயற்கைக் கற்கள், பாதுகாப்புப் பூச்சு இல்லாத மரப் பரப்புகள் மற்றும் எலக்ட்ரானிக் திரைகளில் இதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
மேலும், வினிகர் கலவையைப் ப்ளீச்சுடன் ஒருபோதும் கலக்கக் கூடாது.