இதுநாள் வரை நீங்கள் ருசித்த இந்திய தெரு உணவுகள் உண்மையில் இந்தியாவை பூர்வீகமாக கொண்டது இல்லை!
பல நேரங்களில், இந்தியாவும், அதன் அழகிய நகரங்களும் அங்கே விற்கப்படும், சாட் என்றழைக்கப்படும் தெரு உணவுகளுக்காக அறியப்படுகின்றன. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு பிரபலமான சாட் உணவு உள்ளது. இருப்பினும், சில பிரபலமான இந்திய தெரு உணவுகள் உண்மையில் இந்தியாவை பூர்வீகமாக கொண்டது அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், நீங்கள் படித்தது சரிதான். அத்தகைய சில பிரபலமான உணவுகள் இங்கே.
சமோசா
சூடாக டீயும், ஒரு சமோசாவும் பலரின் ஃபேவரைட். இருப்பினும், இது மத்திய கிழக்கு பிராந்தியத்தை சேர்ந்தது. இந்த சுவையான உணவு, 13 மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளில் டெல்லி சுல்தானகத்தின் ஆட்சியாளர்களுக்கு சமைக்கும் மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவின் சமையல்காரர்களால் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இது முதலில் 'சம்போசா' அல்லது 'சமுசா' என்று அழைக்கப்பட்டது என்றும், 10 ஆம் நூற்றாண்டில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
ஜிலேபி
மற்றொரு பிரபலமான தெரு உணவு ஜிலேபி ஆகும். ஆனால் இது இந்திய உணவு அன்று. மாறாக, இது மத்திய கிழக்கிலிருந்து வந்த ஒரு இனிப்பாகும். இது முதலில் ஜலபியா (அரபியில்) மற்றும் ஜலிபியா (பாரசீக மொழியில்) என்று அழைக்கப்பட்டது. இந்த இனிப்பு, முதன்முதலில் 13 ஆம் நூற்றாண்டில் 'கிதாப் அல்-தபீக்' என்ற சமையல் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டது. இது முதன்முதலில் இந்தியாவில் 15 ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
மோமோஸ்
மோமோஸ் பலரின் பிரியமான உணவாக மாறியுள்ளது. நீங்கள் நினைப்பது போல, இது மணிப்பூரிலிருந்தோ, சிக்கிமிலிருந்தோ வந்த உணவு அன்று. மாறாக, இது திபெத்தை சேர்ந்தது. பின்னர், காத்மாண்டு பள்ளத்தாக்கில் தங்கியிருந்த திபெத்திய குடிப்பாக்களால், நேபாளத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவை சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா உட்பட உலகின் பிற நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன .
குலாப் ஜாமுன்
இந்த பிரபலமான இனிப்பு வகை, உண்மையில் வடஇந்தியாவிலிருந்தோ, இந்தியாவின் வேறு மாநிலத்திலிருந்தோ வந்ததில்லை. ஆம், குலாப் ஜாமூன்கள் பெர்சியாவைச் சேர்ந்தவை. பாரசீக மொழியில் 'கோல்' என்றால் பூ என்றும் 'அப்' என்றால் தண்ணீர் என்றும் பொருள். முதலில் "லுக்மத் அல் காதி" என்று அழைக்கப்பட்ட இந்த ஸ்வீட், கோவாவில் செய்யப்பட்ட உருண்டைகளை தேன் பாகில் ஊறவைத்து , பின்னர் சர்க்கரையுடன் தெளிக்கப்படுகிறது. முகலாய ஆட்சியின் போது அவர்கள் இந்தியாவிற்கு கொண்டு வந்ததாக நம்பப்படுகிறது.