புற்றுநோய் நோயாளிக்கு நிம்மதி தரும் பட்ஜெட்; 17 முக்கிய மருந்துகளின் விலை அதிரடியாகக் குறைகிறது
செய்தி முன்னோட்டம்
மத்திய பட்ஜெட் 2026 இல், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைச் சுமையைக் குறைக்கும் வகையில், 17 முக்கிய புற்றுநோய் மருந்துகளுக்கு அடிப்படை சுங்க வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இவை பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விலையுயர்ந்த பயாலஜிக் மருந்துகளாகும். நிதியமைச்சகத்தின் தகவல்படி, பின்வரும் மருந்துகள் உட்பட 17 மருந்துகள் இனி மலிவான விலையில் கிடைக்கும்: Ribociclib, Abemaciclib: மார்பகப் புற்றுநோய் சிகிச்சைக்கானது. Venetoclax: இரத்தப் புற்றுநோய் சிகிச்சைக்கானது. Ceritinib: நுரையீரல் புற்றுநோய் சிகிச்சைக்கானது. Tremelimumab, Talycabtagene autoleucel: நவீன நோய் எதிர்ப்புச் சிகிச்சைக்கான மருந்துகள்.
சிறப்பு சலுகை
7 அரிய வகை நோய்களுக்கான சிறப்புச் சலுகை
அரிய வகை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் வரிச் சலுகைப் பட்டியலில், மேலும் 7 புதிய நோய்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த நோய்களுக்கான மருந்துகள் மற்றும் சிறப்பு மருத்துவ உணவுகளை தனிப்பட்ட முறையில் இறக்குமதி செய்யும்போது இனி சுங்க வரி கிடையாது. நோய்களின் பட்டியல் பின்வருமாறு:- பிறவி அதீத இன்சுலின் சுரப்பு நோய். பரம்பரை உயர் கொலஸ்ட்ரால் நோய். ஆல்ஃபா மேன்னோசிடோசிஸ். முதன்மை ஹைப்பர் ஆக்சலூரியா. சிஸ்டினோசிஸ். பரம்பரை அங்கியோடீமா. முதன்மை நோயெதிர்ப்பு குறைபாட்டு நோய்கள்.
இறக்குமதி வரி
தனிநபர் இறக்குமதி வரி பாதியாகக் குறைப்பு
பட்ஜெட் 2026 இன் மற்றொரு முக்கிய அம்சமாக, தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கான சுங்க வரி 20 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது உயிர்காக்கும் மருந்துகளைச் சொந்தமாகத் தருவிக்கும் நோயாளிகளுக்குப் பெரும் நிதி நிவாரணமாக அமையும். இந்தியாவிலேயே மலிவான விலையில் மருந்துகளை உற்பத்தி செய்ய ரூ.10,000 கோடி மதிப்பீட்டில் பயோ-பார்மா சக்தி என்ற புதிய திட்டத்தையும் அமைச்சர் அறிவித்தார். இதன் கீழ்: 3 புதிய தேசிய மருந்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் (NIPER) அமைக்கப்படும். நாடு முழுவதும் 1,000 அங்கீகாரம் பெற்ற மருத்துவப் பரிசோதனை மையங்கள் உருவாக்கப்படும். டெல்லியில் உள்ளது போலவே மேலும் 3 புதிய அகில இந்திய ஆயுர்வேதக் கழகங்கள் (AIIA) நிறுவப்படும்.