LOADING...
சென்னையில் மீண்டும் பறவைக் காய்ச்சல் பீதி: என்ன அறிகுறிகள் வந்தால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்?
தமிழகத்தில் மீண்டும் பறவைக் காய்ச்சல் (Bird Flu) அச்சம் ஏற்பட்டுள்ளது

சென்னையில் மீண்டும் பறவைக் காய்ச்சல் பீதி: என்ன அறிகுறிகள் வந்தால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்?

எழுதியவர் Venkatalakshmi V
Feb 06, 2026
03:22 pm

செய்தி முன்னோட்டம்

சென்னையில் சுமார் 1,500 காகங்கள் திடீரென உயிரிழந்ததை தொடர்ந்து, தமிழகத்தில் மீண்டும் பறவைக் காய்ச்சல் (Bird Flu) அச்சம் ஏற்பட்டுள்ளது. அதிவேகமாக உருமாற்றம் அடைந்து வரும் H5N1 வைரஸ், பறவைகளிலிருந்து மனிதர்களுக்கும் பரவக்கூடிய அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, இந்த வைரஸால் பாதிக்கப்படும் மனிதர்களில் இறப்பு விகிதம் சுமார் 48 சதவீதமாக உள்ளது. 2024 முதல் ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, கேரளா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களில் அவ்வப்போது இப்பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்திலும் இது பெரும் பேசுபொருளாகியுள்ளது. தற்போதைய சூழலில், பறவை காய்ச்சலின் அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருப்பது அவசியமாகும்.

அறிகுறிகள்

நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய அறிகுறிகள்

சாதாரண காய்ச்சலை போலவே அதிக காய்ச்சல், இருமல், தொண்டை வலி மற்றும் தசை வலி போன்றவை இதன் ஆரம்பகால அறிகுறிகளாகும். சில நேரங்களில் இது தீவிர சுவாசக் கோளாறு மற்றும் நிமோனியாவிற்கு இட்டுச் செல்லும். வைரஸ் தொற்று ஏற்பட்ட 8 முதல் 10 நாட்களுக்குள் அறிகுறிகள் வெளிப்பட தொடங்கும். தொடர் காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூச்சு திணறல் அல்லது தசை வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும். பறவைகளுடன் தொடர்பில் இருந்த 10 நாட்களுக்குள் இதுபோன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், அதை மருத்துவரிடம் மறக்காமல் தெரிவிக்கவும்.

தடுப்பு முறைகள்

H5N1 பாதிப்பில் இருந்து உங்களை பாதுகாக்க:

உயிருள்ள அல்லது இறந்த கோழிகள், வாத்துகள் மற்றும் காட்டு பறவைகளுடன் நேரடித் தொடர்பைத் தவிர்க்க வேண்டும். பறவைகளின் எச்சம், இறகுகள் அல்லது அவை நடமாடும் இடங்களில் உள்ள கழிவுகளைத் தொடக்கூடாது. கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை முழுமையாக வேகவைத்து உண்ண வேண்டும். இறைச்சியை நறுக்கிய பிறகு, பயன்படுத்திய கத்திகள், பலகைகள் மற்றும் உங்கள் கைகளை சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும். பச்சையான முட்டைகளை உண்பதைத் தவிர்க்க வேண்டும். பறவைகள் அதிகம் உள்ள பண்ணைகள் அல்லது சந்தைகளுக்குச் செல்ல நேர்ந்தால், கண்டிப்பாக மூக்கு மற்றும் வாயை மறைக்கும் வகையில் முகக்கவசம் அணியவும். வீட்டில் வளர்க்கும் பறவைகளை வெளியிலிருந்து வரும் காட்டுப் பறவைகளுடன் பழகவிடாமல் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

Advertisement