காரமான உணவுகள் நம் உடலுக்கு நல்லதா? இதனால் என்ன பாதிப்புகள் ஏற்படும்?
இந்திய உணவுகளில், பல விதமான காரமான உணவுகள் உள்ளன. சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய், மிளகு, மசாலாக்கள் என்று வெவ்வேறு விதமான சுவை உள்ளன. அடிப்படையில் காரத்தன்மை கொண்ட உணவுகளும் இருக்கின்றன. சமைக்கும் போது சேர்க்கப்படும் வெவ்வேறு மசாலாக்களின் சுவையால் காரம் அதிகரிக்கும். பெரும்பாலானவர்கள், காரசாரமான மசாலா உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். அதாவது, அறுசுவைகளில், இனிப்பு, புளிப்பு என்பதைக் கடந்து, காரமான உணவு தான் பிடிக்கும் என்று சாப்பிடுபவர்கள் இருக்கிறார்கள். உண்மைலேயே அதிக காரமான உணவுகளை எடுத்து கொள்வது உடலுக்கு நல்லதா? காரம் அதிகம் இருக்கும் உணவுகளை தொடர்ந்து எப்போதாவது சாப்பிடுவது பரவாயில்லை. ஆனால், அடிக்கடி அலல்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நம் உடலில் எப்படி எல்லாம் பாதிக்கப்படும் மற்றும் அதற்கான அறிகுறிகளை பார்க்கலாம்.
காரமான உணவுகளை சாப்பிடுவதினால் நம் உடல் நமக்கு உணர்த்தும் அறிகுறிகள்
காரம் அதிகமாக இருக்கும் உணவுகள் நெஞ்செரிச்சலை ஏற்படுத்துகிறது. மேலும் காரமான உணவுகளை சாப்பிடும்போது நம் உடலிலுள்ள வெட்பநிலை அதிகமாகிறது. இதனால் வியர்வை அதிகரித்து, சருமத்தில் எண்ணெய்ப்பசை உண்டாக்கி முகத்தில் முகப்பருக்கள் தோன்றலாம். பொதுவாக வாய் துர்நாற்றம் என்றால் அதற்கு காரணம் பூண்டு, வெங்காயம் போன்ற உணவுகள் சாப்பிடுவதால் ஏற்படலாம் என்று நினைப்போம். ஆனால் அதிகப்படியான காரத்தை உணவுகளில் சேர்ப்பதினால் செரிமான பிரச்சினை ஏற்படுகிறது. அது வாய் துர்நாற்றத்தையும் ஏற்படுத்தலாம். இது தொண்டைப்புண் ஏற்படுவதற்கும் காரணமாக அமைகிறது. மேலும் காரத்தை உணவில் அதிகம் சேர்ப்பதினால் உடலுக்கு பசியின்மையையும் ஏற்படுத்தலாம். எனவே அதிக கார உணவுகளை சாப்பிடும் போது இந்த மாதிரியான அறிகுறிகள் தென்பட்டால் காரமான உணவுகளை குறைத்து கொள்ளுவது நல்லது.