LOADING...
சென்னைக்கென பிரத்யேக தேர்தல் அறிக்கை ஏன்? திமுகவின் சூப்பர்-6 திட்டத்தின் பின்னணி
சென்னைக்கென பிரத்யேக தேர்தல் அறிக்கை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்

சென்னைக்கென பிரத்யேக தேர்தல் அறிக்கை ஏன்? திமுகவின் சூப்பர்-6 திட்டத்தின் பின்னணி

எழுதியவர் Sekar Chinnappan
Apr 19, 2026
07:03 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை நகரத்திற்கென பிரத்யேகமாக சென்னை சூப்பர்-6 என்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். மாநில அளவிலான வாக்குறுதிகளைத் தாண்டி, சென்னையைப் போன்ற ஒரு பெருநகரத்தின் பிரத்யேகத் தேவைகளான போக்குவரத்து நெரிசல், நகர்ப்புற கட்டமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் தனி கவனம் செலுத்துவதே இந்தத் தனி அறிக்கைக்கான முக்கியக் காரணமாக திமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது.

காரணம்

சென்னைக்கென ஏன் தனி அறிக்கை?

சென்னை போன்ற வேகமாக வளர்ந்து வரும் பெருநகரங்களில், மக்கள் தொகை அடர்த்தி மற்றும் உள்கட்டமைப்புச் சவால்கள் மாநிலத்தின் மற்ற பகுதிகளை விட முற்றிலும் மாறுபட்டவை. பொதுப் போக்குவரத்து, கழிவுநீர் மேலாண்மை மற்றும் ஸ்மார்ட் நகர மேம்பாடு போன்ற சிக்கல்களுக்குப் பொதுவான தேர்தல் அறிக்கையை விட, ஒரு குறிப்பிட்ட நகர்ப்புறத் திட்டம் அவசியம் என்பதால் திமுக இந்த முன்னெடுப்பை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. நகரவாசிகளின் அன்றாட வாழ்க்கை முறையை மேம்படுத்துவதே இதன் முதன்மை நோக்கமாக திமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது.

முக்கிய அம்சங்கள்

சென்னை சூப்பர்-6 திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

பொது வசதிகள் மற்றும் நகர்ப்புற மேம்பாடு: குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு ஆர்ஓ சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உயர் ரக தெருவிளக்குகளை அமைத்தல். மேம்பட்ட நகர்ப்புற போக்குவரத்து: 1,000 புதிய மினி-பேருந்துகள் மூலம் மெட்ரோ மற்றும் ரயில் நிலையங்களை இணைக்கும் 'லாஸ்ட்-மைல் கனெக்டிவிட்டி' (Last-mile connectivity) ஏற்படுத்துதல். ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பயண நேரத்தை 25% வரை மிச்சப்படுத்துதல்.

Advertisement

உள்கட்டமைப்பு

உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாடு

காலக்கெடுவுடன் கூடிய கட்டமைப்புத் திட்டங்கள்: எண்ணூர்-பூஞ்சேரி வெளிவட்ட சாலை (2027), மெட்ரோ விரிவாக்கம் மற்றும் மழைநீர் வடிகால் (2028), மற்றும் பாதாள சாக்கடைத் திட்டங்கள் (2027) என ஒவ்வொரு திட்டத்திற்கும் தெளிவான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அறிவியல் பூர்வமான தெருநாய் மேலாண்மை: கூடுதல் கால்நடை மருத்துவர்கள், நாய் பிடிப்பவர்கள் மற்றும் என்ஜிஓக்களுடன் இணைந்து கூடுதல் காப்பகங்களை அமைப்பதன் மூலம் தெருநாய்களை மனிதாபிமானத்துடன் மேலாண்மை செய்தல். உலகளாவிய தொழில்நுட்ப மையம்: ரூ.10,000 கோடி முதலீட்டில் ஏஐ, அனிமேஷன், கேமிங் தொழில்நுட்பங்களுக்காக ஒரு உலகத்தரம் வாய்ந்த மையத்தை அமைத்தல். இது 20,000 பேருக்கு உயர் ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பை உருவாக்கும். குளோபல் டேலண்ட் கேட்வே: வேலைவாய்ப்பை அதிகரிக்க திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மற்றும் ஆராய்ச்சி வசதிகளை மேம்படுத்துதல்.

Advertisement

தேர்தல்

தேர்தலும் சென்னையின் வளர்ச்சியும்

ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில், சென்னையின் வளர்ச்சி என்பது வாக்காளர்களுக்கு மிக முக்கியமான ஒரு காரணியாகும். 5.67 கோடி வாக்காளர்களைக் கொண்ட தமிழகத்தில், சென்னையின் பங்களிப்பு மிக அதிகம். திமுக+, அதிமுக+, நாதக மற்றும் தவெக என பல்முனைப் போட்டி நிலவும் சூழலில், சென்னை நகரவாசிகளை ஈர்க்கும் வகையில் இந்த சூப்பர்-6 திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 2029 ஆம் ஆண்டிற்குள் சென்னையை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் இந்தத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

Advertisement