சுதந்திர தின கொண்டாட்டத்திற்குப் பிறகு தேசிய கொடியை என்ன செய்ய வேண்டும்; விரிவான வழிகாட்டுதல்
ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் 15 அன்று இந்தியர்கள் அனைவராலும் சுதந்திர தினம் மிகவும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. கொண்டாட்டம் முடிந்தவுடன் தேசிய கொடியை என்ன செய்ய வேண்டும் என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். இந்தியாவின் கொடி குறியீடு 2002, மூவர்ணக் கொடியை ஒருவர் எவ்வாறு வைத்திருக்க வேண்டும் என்பதற்கான சில வழிகாட்டுதல்களைத் தருகிறது. தேசியக் கொடியை இறக்கிய பிறகு மடித்து மரியாதையுடன் வைக்க வேண்டும். கொடியை கிடைமட்டமாக வைத்து, காவி நிற பட்டை மேலேயும், வெள்ளை நிற பட்டை நடுவிலும், பச்சை நிற பட்டை கீழேயும் இருக்கும்படி மடிக்க வேண்டும். பின்னர், காவி மற்றும் பச்சை நிற பட்டைகளின் பகுதிகளுடன் அசோக சக்கரம் மட்டுமே தெரியும் வகையில் வெள்ளை நிற பட்டையை மடிக்க வேண்டும்.
சேதமடைந்த கொடிகளை என்ன செய்வது?
சேதமடைந்த அல்லது சிதைந்த தேசியக் கொடியை காட்டுவது அல்லது ஏற்றுவது அவமரியாதையாகும். தேசியக் கொடியின் கண்ணியத்தைக் கருத்தில் கொண்டு, தனிப்பட்ட முறையில் எரிப்பதன் மூலமோ அல்லது வேறு எந்த முறையிலோ அதை மொத்தமாக அழிக்கலாம். கொடியை புதைக்கவும் செய்யலாம். ஆனால் மண்ணை அகற்றும்போது அது மீண்டும் வெளியில் தோன்றும்படி இருக்கக் கூடாது. மக்கள் சுதந்திர தின கொண்டாட்டங்களை நினைவுகூரும் வகையில் காகித அடிப்படையிலான தேசிய கொடிகளை பரவலாக பயன்படுத்துகின்றனர். இந்தக் கொடிகள் சேதமடைந்தால், அவற்றை தரையில் வீசவோ அல்லது குப்பைத் தொட்டியில் வீசவோ கூடாது. அதற்கு பதிலாக, நீங்கள் அவற்றை தனிப்பட்ட முறையில் எரிக்கலாம் அல்லது புதைக்கலாம்.
சேதமடைந்த கொடிகளை அழிக்கும்போது செய்யக் கூடாதவை
சேதமடைந்த கொடியை புதைப்பதாக இருந்தால், மரப்பெட்டிக்குள் வைத்து புதைக்கவும். சிறிது நேரம் மௌனத்தைக் கடைபிடியுங்கள். நீங்கள் அதை எரிக்கிறீர்கள் என்றால், அவ்வாறு செய்ய சுத்தமான தனிப்பட்ட இடத்தை தேர்வு செய்யவும். நீங்கள் கொடியை சரியாக மடித்து, அது தீப்பிழம்புகளின் மையத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும். கொடியை நேரடியாக எரிப்பது சட்டப்படி குற்றம். தேசியக் கொடியானது தரையைத் தொடக்கூடாது மற்றும் எப்போதும் சரியாக நிலைநிறுத்தப்பட வேண்டும். முக்கிய அரசு உயரதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்களின் மரணத்தின்போது மட்டும் அது அரைக்கம்பத்தில் இருக்கும். மூவர்ணக் கொடியில் எழுதுவது தடைசெய்யப்பட்டுள்ளது. பல நாடுகளைப் போலன்றி, தேசியக் கொடியை எந்த வடிவத்திலும் திரைச்சீலையாகப் பயன்படுத்த முடியாது.