101 வயதில் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்
செய்தி முன்னோட்டம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் மற்றும் தியாக செம்மல் இரா. நல்லகண்ணு (101) உடல்நலக் குறைவு காரணமாக இன்று பிற்பகல் 1.55 மணியளவில் சென்னையில் காலமானார். அவரது மறைவு தமிழக அரசியல் களத்தில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாக கருதப்படுகிறது. ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரகக் கோளாறு காரணமாக கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை முதல் அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. முக்கிய உடலுறுப்புகள் அனைத்தும் செயலிழந்ததை தொடர்ந்து, அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வாழ்க்கை
வாழ்க்கை பயணம்
1925-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்த நல்லகண்ணு, தனது 18-வது வயதிலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்தார். நெல்லை சதி வழக்கில் கைது செய்யப்பட்டு கொடிய சித்ரவதைகளை அனுபவித்தவர். நாடு விடுதலை பெற்றபோதுதான் இவர் சிறையில் இருந்து விடுதலையானார். 13 ஆண்டுகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக பணியாற்றியவர். தமிழக விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராகவும் சிறந்து விளங்கினார். மணல் கொள்ளைக்கு எதிரான போராட்டம், தீண்டாமை ஒழிப்பு மற்றும் விவசாயிகளுக்கான போராட்டங்களில் தனது வாழ்நாள் முழுவதும் முன்னின்றவர். தனக்கு அரசு வழங்கிய விருதுத் தொகைகள் மற்றும் வீடு ஆகியவற்றை கட்சிக்கே வழங்கியவர். அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.