வண்டலூர் உயிரியல் பூங்கா- ஒப்பந்த ஊழியர்கள் 3வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்
சென்னையை அடுத்த வண்டலூர் பகுதியில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2,382 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகிறது. இங்கு பணிபுரியும் தினக்கூலி பணியாளர்கள் வழக்கம் போல் நேற்று முன்தினம் பணிக்கு வந்துள்ளார்கள். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் பயோமெட்ரிக் முறையில் தங்கள் வருகையை பதிவு செய்துவிட்டு உள்ளே செல்லுமாறு கூறியுள்ளார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த 219 தினக்கூலி பணியாளர்கள், 15 ஆண்டுகள் தினக்கூலியாக பணிபுரியும் ஊழியர்களை நிரந்தரமாக பணியமர்த்தப்பட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட துவங்கியுள்ளனர். பூங்கா நுழைவுவாயில் பகுதியில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், அன்றைய தினமே பூங்கா சார்பில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள்.
கோரிக்கைகள் ஏற்கப்படாததால் தொடரும் போராட்டம் - ஊழியர்கள் இல்லாததால் பணிகள் முடக்கம்
உயிரியல் பூங்கா துணை இயக்குனர் காஞ்சனா, உதவி இயக்குனர் மணிகண்ட பிரபு ஆகியோர் தினக்கூலி ஊழியர்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பொழுது, நிரந்தரமாக பயோமெட்ரிக் வருகை பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். அதற்கு அதிகாரிகள், இனி வரும் காலங்களில் பயோமெட்ரிக் முறை தான் நடைமுறையில் இருக்கும். அதனை ரத்து செய்ய முடியாது, மற்ற 8 அம்ச கோரிக்கைக்களை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஊழியர்கள் தொடர்ந்து இன்று 3வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களது போராட்டம் காரணமாக, பூங்காவில் உள்ள குறைந்தளவு நிரந்தர ஊழியர்களால் அனைத்து விலங்குகளை பராமரிப்பது, உணவளிப்பது, பூங்காவை சுத்தம் செய்யும் பணிகள் அனைத்தையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.