மிசோரமில் சிக்கிய அமெரிக்க கூலிப்படை வீரர் மேத்யூ வான்டைக்! உக்ரைன் வீரர்களுடன் ஊடுருவியது ஏன்? வெளிச்சத்திற்கு வரும் மர்மம்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), கடந்த வாரம் மூன்று விமான நிலையங்களில் நடத்திய அதிரடி சோதனையில், அமெரிக்காவைச் சேர்ந்த மேத்யூ வான்டைக் மற்றும் 6 உக்ரைன் நாட்டவர்களைக் கைது செய்துள்ளது. இவர்கள் சுற்றுலா விசா மூலம் இந்தியா வந்து, சட்டவிரோதமாக மிசோரம் வழியாக மியான்மருக்குள் ஊடுருவ முயன்றதாகக் கூறப்படுகிறது. கூடுதல் விவரங்கள் இங்கே:-
மேத்யூ வான்டைக்
மேத்யூ வான்டைக் என்பவர் யார்?
மேத்யூ வான்டைக் ஒரு சாதாரண அமெரிக்கர் அல்ல. இவர் லிபியா மற்றும் சிரியா போன்ற உள்நாட்டுப் போர் நடந்த நாடுகளில் ஆயுதம் ஏந்திப் போராடியவர். Sons of Liberty International (SOLI) என்ற கூலிப்படை குழுவின் நிறுவனர் இவர். இந்த நிறுவனம் ஒரு குறிப்பிட்ட கொள்கைக்காகப் போராடும் குழுக்களுக்கு ராணுவப் பயிற்சி அளிக்கும் பணியைச் செய்கிறது. 2019இல் இந்தியாவில் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுவதாக இவர் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.
ஷேக் ஹசீனா
ஷேக் ஹசீனாவின் எச்சரிக்கை பின்னணி
2024ல் ஆட்சியில் இருந்து அகற்றப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, ஷேக் ஹசீனா ஒரு பகீர் தகவலை வெளியிட்டார். "வங்கதேசம் மற்றும் மியான்மரின் சில பகுதிகளைப் பிரித்து, கிழக்கு திமோர் போல ஒரு கிறிஸ்தவ நாட்டை உருவாக்க ஒரு வெள்ளையர் சதி செய்கிறார். வங்கதேசத்தில் விமானப்படை தளம் அமைக்க அனுமதி அளித்தால், மீண்டும் நான் ஆட்சிக்கு வர அவர் உதவுவதாகக் கூறினார்." என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ள வான்டைக் மற்றும் உக்ரைன் வீரர்கள், மியான்மரில் உள்ள கிளர்ச்சிக் குழுக்களுக்கு ட்ரோன் கருவிகள் மற்றும் ஆயுதப் பயிற்சி அளித்ததாக என்ஐஏ தெரிவித்துள்ளது. இது ஹசீனா சொன்ன வெளிநாட்டுச் சதியுடன் தொடர்புடையதாக இருக்கலாம் எனப் பாதுகாப்பு வல்லுநர்கள் கருதுகின்றனர்.
மிசோரம்
மிசோரம் முதல்வர் சொன்ன தகவல்
மிசோரம் முதல்வர் லால்டுஹோமா, கடந்த 2025 மார்ச் மாதம் சட்டமன்றத்தில் ஒரு தகவலைப் பகிர்ந்திருந்தார். "உக்ரைன் போரில் பங்கேற்ற வீரர்கள் மிஸோரம் வழியாக மியான்மருக்குச் சென்று அங்குள்ள கிளர்ச்சியாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது." என்று அவர் கூறியிருந்தார். தற்போது கைதானவர்களில் 6 பேர் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு நிபுணர்களின் கருத்துப்படி, அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தியாவின் வடகிழக்கு மற்றும் மியான்மர் எல்லையில் ஒரு மேலாதிக்கத்தை உருவாக்க விரும்புவதாகத் தெரிகிறது. இதன் மூலம் சீனா மீது ஒரு கண் வைக்க முடியும் என்பது அவர்களின் கணக்காக இருக்கலாம். இருப்பினும், இந்திய அரசு மற்றும் என்ஐஏ இது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.