LOADING...
யுபிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கலா? இனி கவலையே வேண்டாம்; விண்ணப்பதாரர்களுக்கு உதவ புதிய ஹெல்ப்லைன்
யுபிஎஸ்சி குடிமைப்பணித் தேர்வு 2026க்காக விண்ணப்பதாரர்களுக்கு உதவ புதிய ஹெல்ப்லைன்

யுபிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கலா? இனி கவலையே வேண்டாம்; விண்ணப்பதாரர்களுக்கு உதவ புதிய ஹெல்ப்லைன்

எழுதியவர் Sekar Chinnappan
Feb 08, 2026
01:54 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய பொதுப்பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), 2026 ஆம் ஆண்டிற்கான குடிமைப்பணித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில் தனது உதவி மைய சேவைகளை விரிவாக்கம் செய்துள்ளது. விண்ணப்பம் தாக்கல் செய்யும் போது ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகளைத் தீர்க்க, கூடுதல் நேரத்துடன் கூடிய இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான தேர்வர்கள் தடையின்றி விண்ணப்பிக்க முடியும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

வேலை நேரம்

புதிய வேலை நேரமும் மாற்றங்களும்

வழக்கமாக அலுவலக நேரங்களில் மட்டுமே செயல்பட்டு வந்த உதவி மையம், தற்போது விண்ணப்பக் காலம் முடியும் வரை வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் செயல்படும். காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இரண்டு ஷிப்டுகளாக இந்த உதவி மையம் இயங்கும். அழைப்புகளுக்காகக் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கும் வகையில், கால் சென்டரின் திறன் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியானது தேர்வாணையத்தின் செயல்பாடுகளைத் தேர்வர்களுக்கு ஏற்றவாறு மாற்றுவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

முக்கிய தேதிகள்

காலிப்பணியிடங்கள் மற்றும் முக்கிய தேதிகள்

யுபிஎஸ்ஸ் குடிமைப் பணிகள் தேர்வு 2026 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் மொத்தம் 933 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் மாற்றுத்திறனாளிகளுக்காக 33 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கக் கடைசி நாள் பிப்ரவரி 24, 2026 ஆகும். கடந்த 2024-ல் 1,105 இடங்களும், சென்ற ஆண்டு 979 இடங்களும் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 933 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Advertisement

விண்ணப்பம்

விண்ணப்பிக்கும் முறை

தகுதியுள்ள தேர்வர்கள் யுபிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான upsc.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் போது ஏதேனும் சிரமம் ஏற்பட்டால், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள நேரங்களில் தேர்வாணையத்தின் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு தீர்வு காணலாம். விண்ணப்பதாரர்களின் குறைகளுக்கு விரைவாகப் பதிலளிப்பதையும், தேர்வெழுதும் செயல்முறையை எளிதாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக யுபிஎஸ்சி தலைவர் டாக்டர் அஜய் குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement