சட்டமன்றத்தில் காரசார விவாதம்: 3 ஃபைல்களைத் திறக்க உதயநிதி சவால்; பதிலடி கொடுத்த அமைச்சர்கள்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஆளுங்கட்சி அமைச்சர்களிடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. நேரலை பதிவுகள் சமூக வலைதளங்களில் தவறாக பயன்படுத்தப்படுவது குறித்தும், முதலமைச்சர் குறிப்பிட்ட மூன்று கோப்புகள் குறித்தும் உதயநிதி கேள்வி எழுப்பினார். அவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ஆளுங்கட்சி உறுப்பினர்களும் அமைச்சர்களும் ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளை வைப்பதாகவும், அவை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டாலும் நேரலையில் ஒளிபரப்பாவதால் சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' ஆக பரவி வருவதாகக் குற்றம்சாட்டினார். அவையில் அமைச்சர்கள் பாட்டு பாடும் சூழல் நிலவுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
சவால்
"அந்த 3 ஃபைல்களையும் திறங்கள்": உதயநிதி சவால்
முதலமைச்சர் விஜய் தனது மேஜையில் 3 கோப்புகள் இருப்பதாகக் கூறி, அதைத் திறக்க வைத்துவிடாதீர்கள் என்று எச்சரித்ததைக் குறிப்பிட்ட உதயநிதி, "எதற்காக அந்த கோப்புகளைத் திறக்காமல் பயப்படுகிறீர்கள்? 3 மாதங்களாக இதையே கூறிக்கொண்டு கால தாமதம் செய்வது ஏன்? நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? தவறு யார் செய்திருந்தாலும் உடனடி நடவடிக்கை எடுங்கள், இத்தகைய மிரட்டல்களுக்கு திமுக அஞ்சாது" என்று அவையில் ஆவேசமாகச் சவாலை முன்வைத்தார்.
பதிலடி
ஆளுங்கட்சி அமைச்சர்களின் பதிலடி
உதயநிதியின் கேள்விகளுக்குப் பதிலளித்த செய்தித் துறை அமைச்சர் சி.டி. நிர்மல்குமார், "ஜோசியம் பற்றிப் பேசுகிறார்கள்; மஞ்சள் துண்டு போட்ட கதையெல்லாம் நமக்கும் தெரியும். எப்போது நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அப்போது சரியான நேரத்தில் அரசு எடுக்கும்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய செய்தி மற்றும் செய்தித் தொடர்புத் துறை அமைச்சர் ராஜ்மோகன், ஜனநாயக முறைப்படி மக்களுக்காகவே நேரலை செய்யப்படுவதாகவும், ஊழல் கோப்புகளைத் திறந்து நடவடிக்கை எடுப்பதில் முதலமைச்சர் விஜய்க்கு எந்தத் தயக்கமும் இல்லை என்றும், எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கையை முதலமைச்சர் நிச்சயமாக நிறைவேற்றுவார் என்றும் பதிலளித்தார்.