LOADING...
விஜய்க்கு முன் தமிழக அரசியல் வரலாற்றில் 2 தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் வேட்பாளர்கள் யார்?
விஜய்க்கு முன் தமிழக அரசியல் வரலாற்றில் 2 தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் வேட்பாளர்கள்

விஜய்க்கு முன் தமிழக அரசியல் வரலாற்றில் 2 தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் வேட்பாளர்கள் யார்?

எழுதியவர் Sekar Chinnappan
Mar 29, 2026
06:57 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டுமல்லாமல், இரண்டு தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அறிவித்து அதிரடி காட்டியுள்ளார். சென்னையின் பெரம்பூர் தொகுதி மற்றும் திருச்சியின் திருச்சி கிழக்கு தொகுதி ஆகிய இரண்டிலும் அவர் களம் காண்கிறார். ஒரு முதல்வர் வேட்பாளர் பாதுகாப்பிற்காகவோ அல்லது செல்வாக்கை நிரூபிக்கவோ இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது இந்திய அரசியலில் புதிதல்ல என்றாலும், தமிழகத்தில் இது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சட்டம்

ஒருவர் 2 தொகுதிகளில் போட்டியிடலாமா?

இந்தியத் தேர்தல் சட்டத்தின்படி, குறிப்பாக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 33(7)இன் கீழ், ஒரு வேட்பாளர் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக இரண்டு தொகுதிகளில் போட்டியிட அனுமதி உண்டு. இதைப் பயன்படுத்தியே விஜய் தற்போது இரண்டு தொகுதிகளைத் தேர்வு செய்துள்ளார். ஒருவேளை இரண்டிலும் வெற்றி பெற்றால், 10 நாட்களுக்குள் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் இரண்டு தொகுதிகளுமே காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்பது விதிமுறை.

2001

ஜெயலலிதாவின் 2001 தேர்தல் சர்ச்சை

தமிழக அரசியல் வரலாற்றில் 2001 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஒரு மிகப்பெரிய ரிஸ்க் எடுத்தார். அவர் ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி மற்றும் புதுக்கோட்டை ஆகிய நான்கு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால், சட்டப்படி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட முடியாது என்பதால், அவரது நான்கு வேட்புமனுக்களுமே தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டன. இருப்பினும், தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற பின், எம்எல்ஏவாக இல்லாமலேயே அவர் முதல்வராகப் பதவியேற்றது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, 1991 தேர்தலில் ஜெயலலிதா பர்கூர் மற்றும் காங்கேயம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வென்றார். பின்னர் காங்கயம் தொகுதி பதவியை ராஜினாமா செய்தார்.

Advertisement

எம்ஜிஆர்

இரண்டு தொகுதிகளில் மனு தாக்கல்

ஜெயலலிதாவைப் போல் எம்ஜிஆர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடவில்லை என்றாலும், 1980 தேர்தலில் இரண்டு தொகுதிகளில் மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது ஆண்டிப்பட்டி மற்றும் மதுரை மேற்கு தொகுதிகளில் மனுத் தாக்கல் செய்தார். எனினும், பின்னர் ஆண்டிப்பட்டி வேட்புமனுவை வாபஸ் பெற்று மதுரை மேற்கு தொகுதியில் மட்டும் போட்டியிட்டார். அந்த தொகுதியில் அவர் வென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement

விஜய்

விஜய் ஏன் 2 தொகுதிகளைத் தேர்வு செய்தார்?

இந்நிலையில், விஜய் தனது அரசியல் பயணத்தின் முதல் தேர்தலிலேயே ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்பதையே இந்த முடிவு காட்டுகிறது. வட தமிழகத்தில் பெரம்பூர் தொகுதியையும், மத்திய தமிழகத்தில் திருச்சி கிழக்கு தொகுதியையும் அவர் தேர்வு செய்துள்ளார். பெரம்பூரில் தவெகவிற்கு வலுவான வாக்கு வங்கி இருப்பதாகக் கருதப்படும் நிலையில், திருச்சியில் போட்டியிடுவது தென் மாவட்டத் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் என அவர் நம்புகிறார். எப்படியாவது சட்டமன்றத்திற்குள் நுழைந்துவிட வேண்டும் என்பதே அவரது முதன்மை இலக்காக உள்ளதாக கூறப்படுகிறது.

கணிப்பு

தேர்தல் கணிப்புகளும் தவெகவின் நிலையும்

பல்வேறு தேர்தல் முன்கணிப்புகளின்படி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இந்தத் தேர்தலில் சுமார் 10 முதல் 15 சதவீதம் வரை வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இது ஆளுங்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய இரண்டிற்குமே சவாலாக அமையலாம். விஜய் மார்ச் 30 ஆம் தேதிக்குப் பிறகு தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளார். இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது அவருக்குப் பலமா அல்லது பலவீனமா என்பது தேர்தல் முடிவுகளில்தான் தெரியவரும்.

Advertisement