ஆபாச குறுஞ்செய்தி புகார் எதிரொலி: தவெக MLA அருள் விக்னேஷுக்கு 5 ஆண்டுகள் சிறை மற்றும் பதவி பறிப்பு?
செய்தி முன்னோட்டம்
பெண் IAS அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது எழுந்துள்ள புகார் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அனுமதியின்றி தனது தனிப்பட்ட இடத்திற்குள் நுழைய முயன்றதாகவும் அதிகாரி தனது புகாரில் குறிப்பிட்டுள்ள நிலையில், பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை தடுப்புப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினருக்கு எத்தகைய கடுமையான தண்டனைகள் கிடைக்கும் மற்றும் அவரது பதவிக்கு ஏற்படக்கூடிய சட்டச் சிக்கல்கள் என்ன என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
சட்டம்
பணியிடத்தில் பாலியல் தொல்லைச் சட்டமும் வார்த்தை ரீதியான குற்றங்களும்
பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ், உடல் ரீதியான அத்துமீறல்கள் மட்டுமின்றி தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துவதும் கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது.
ஒரு பெண்ணின் உடை, உடல் அல்லது தோற்றம் குறித்து முறையற்ற கருத்துக்களைத் தெரிவிப்பது, ஆபாசமான நகைச்சுவைகள், பாலியல் ரீதியாக இழிவுபடுத்தும் சொற்கள் மற்றும் பணி தொடர்பான உரையாடல்களை பாலியல் சார்ந்ததாக மாற்றுவது ஆகியவை வார்த்தைகள் அடிப்படையிலான துன்புறுத்தலாக வரையறுக்கப்பட்டுள்ளன.
உள் புகார் குழுவின் விசாரணையைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பாதிப்புகளுக்கு ஏற்ப இழப்பீடு வழங்கவும், எழுத்துப்பூர்வ மன்னிப்பு முதல் பணி நீக்கம் வரையிலான ஒழுங்கு நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கவும் இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது.
தண்டனைகள்
பாரதிய நியாய சன்ஹிதா சட்டப் பிரிவுகளின் கீழ் கிடைக்கும் தண்டனைகள்
குற்றவியல் சட்டமான பாரதிய நியாய சன்ஹிதாவின் பல்வேறு பிரிவுகளின் கீழ் இத்தகைய பாலியல் துன்புறுத்தல் குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுகின்றன.
குறிப்பாக, பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 75-ன் படி, பாலியல் ரீதியான கருத்துக்களைத் தெரிவிப்பவர்களுக்கு ஓராண்டு வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்.
அதேபோல், பிரிவு 79-ன் கீழ், இணையவழி மற்றும் டிஜிட்டல் தகவல் தொடர்புகள் உட்பட ஒரு பெண்ணின் தனியுரிமையில் அத்துமீறும் நோக்கத்திலோ அல்லது அவரது கண்ணியத்திற்குப் பங்கம் விளைவிக்கும் வகையிலோ வார்த்தைகளைப் பயன்படுத்தினால், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.
கடுமையான விதிகள்
தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின் கடுமையான விதிகள்
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம், 2025-ஆம் ஆண்டின் திருத்தத்திற்குப் பிறகு மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அச்சுறுத்தல், அவமானம் அல்லது சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் வாய்மொழியாகவோ, சைகை மூலமாகவோ அல்லது டிஜிட்டல் மற்றும் மின்னணு சாதனங்கள் வாயிலாகவோ அநாகரிகமாக நடந்து கொள்வது பிணையில் வெளிவர முடியாத குற்றமாகும்.
இந்தச் சட்டத்தின் கீழ் முதல் முறையாக குற்றம் நிரூபிக்கப்பட்டாலே ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
மீண்டும் மீண்டும் இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு இன்னும் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்.
பதவி பறிப்பு
உடனடி எம்.எல்.ஏ பதவி பறிப்பும், 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடையும்
இந்த வழக்கில் நீதிமன்ற விசாரணையின் முடிவில் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால், அவரது அரசியல் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாகும்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 8-ன் கீழ், ஒரு மக்கள் பிரதிநிதிக்கு இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால், தீர்ப்பு வழங்கப்பட்ட நாளிலிருந்தே அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவி உடனடியாக பறிக்கப்படும்.
அதுமட்டுமின்றி, சிறைத்தண்டனை காலம் முடிந்து விடுதலையான பிறகும், அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு அவர் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட முடியாதவாறு தகுதி நீக்கம் செய்யப்படுவார்.
இந்த வழக்கில் வெளிவரப்போகும் ஆதாரங்களும் சட்ட நடவடிக்கைகளும் தமிழக அரசியலில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.