Loading...
திருச்சியில் பல்முனை சரக்கு போக்குவரத்து மையம்: சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு
திருச்சியில் பல்முனை சரக்கு போக்குவரத்து மையம்

திருச்சியில் பல்முனை சரக்கு போக்குவரத்து மையம்: சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Aug 31, 2026
02:01 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள திருச்சியை மாநிலத்தின் முக்கிய சரக்கு போக்குவரத்து முனையமாக மேம்படுத்தும் நோக்கில், அங்குப் புதிய பல்முனை சரக்கு போக்குவரத்து மையம் அமைக்கப்படும் என தமிழக சட்டமன்றத்தில் விதி 110ன் கீழ் முதலமைச்சர் விஜய் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு மத்திய மற்றும் தென் மாவட்டங்களின் வர்த்தக வட்டாரங்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-

சரக்கு போக்குவரத்து

தொழில் மற்றும் சரக்கு போக்குவரத்திற்குப் புதிய வேகம்

திருச்சி மாநிலத்தின் மையத்தில் அமைந்திருப்பதால், அனைத்து மாவட்டங்களையும் எளிதில் இணைக்கும் முதன்மைப் போக்குவரத்து மையமாகத் திகழ்கிறது.

அரசின் முடிவின்படி, இங்கு பல்முனை சரக்கு மையம் அமைவதன் மூலம் சாலை, ரயில் மற்றும் வான்வழிப் போக்குவரத்து அமைப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டு, சரக்குகளை வேகமாகவும் மிகக் குறைந்த செலவிலும் கையாளுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

இது மண்டலத்தின் தொழில் நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்களை விரைவாக விநியோகிக்கப் பெரிதும் உதவும்.

திட்ட அறிக்கை

டிட்கோ மூலம் முதற்கட்ட ஆய்வு மற்றும் விரிவான திட்ட அறிக்கை

இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான முதற்கட்ட சாத்தியக்கூறு ஆய்வுகளைத் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) மேற்கொள்ள உள்ளது.

மையத்திற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், நிலத்தேவை மற்றும் செயல்பாட்டு அம்சங்கள் குறித்து டிட்கோ விரிவாக ஆராயும்.

அந்த ஆய்வுகளின் முடிவுகளின் அடிப்படையில், திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அடுத்தகட்ட பணிகள் தொடங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த சரக்கு மையம் அமைவதன் மூலம் திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் வர்த்தகம் பெருமளவில் வளர்ச்சியடையும்.

சரக்கு கையாளுதல், சேமிப்புக் கிடங்குகள், போக்குவரத்து மற்றும் விநியோகம் சார்ந்த பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும்.

மேலும், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த போக்குவரத்து கட்டமைப்பை உலகத்தரத்திற்கு உயர்த்தும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்.

ADVERTISEMENT