ஒரு கிலோ தக்காளி விலை ரூ.100யை தாண்டியது - பொதுமக்கள் அதிர்ச்சி
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு நாளைக்கு 1200 டன் தக்காளிகள் தேவைப்படும் நிலையில், தற்போது 700 டன் வரை மட்டுமே வியாபாரிகள் தக்காளியினை கொள்முதல் செய்து வருகிறார்கள். கோடை காலம் இடையே பெய்து வரும் மழை காரணமாக மார்க்கெட்டில் காய்கறிகளை சேமித்து வைக்க சரியான குளிர்பதன கிடங்குகள் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் குளிப்பதன கிடங்குகளை வாடகைக்கு எடுக்க வேண்டிய சூழல் வியாபாரிகளுக்கு ஏற்பட்டுள்ளதால், குறைந்தளவிலான காய்கறிகளையே அவர்கள் கொள்முதல் செய்து வருகிறார்கள். இதன் காரணமாகவே தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலையானது அதிகரித்துள்ளது என்று கோயம்பேடு சிறு மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.
காய்கறிகளின் விலை பல மடங்கு அதிகரிப்பு
கடந்த மாதம் வரை ரூ.30ல் இருந்து ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளியின் விலை வரும் காலங்களில் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மழை காரணமாக தற்போது சென்னை புறநகர் பகுதிகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.110க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இல்லத்தரசிகள் மற்றும் உணவகங்கள் நடத்துவோர் தாக்காளி வாங்கும் அளவினை குறைத்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. அதே போல் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.120, இஞ்சி ஒரு கிலோ ரூ.200 ஆகவிற்பனை செய்யப்பட்டு வருகிறது. காய்கறிகளின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளதால் என்பதால் பொது மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.