மாணவர்களுக்கு இனி கவலையே இல்லை! தமிழகத்தில் ஏப்ரல் வரை தடையற்ற மின்சாரம் வழங்க மின்வாரியம் உத்தரவு
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை (மார்ச் 3) முதல் தொடங்கவுள்ள நிலையில், மாணவர்கள் எவ்வித இடையூறுமின்றித் தேர்வுக்குத் தயாராவதை உறுதி செய்ய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, பொதுத்தேர்வுகள் முடிவடையும் வரை தமிழகம் முழுவதும் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்படாது என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
தற்காலிக நிறுத்தம்
பராமரிப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்
வழக்கமாகத் துணை மின் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் மாதாந்திர பராமரிப்பு பணிகளின் காரணமாக, காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கம். ஆனால், தற்போது தேர்வு காலம் என்பதால் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதும் நேரத்திலும், படிக்கும் நேரத்திலும் மின்தடை ஏற்படாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத பழுதுகள் ஏற்பட்டால் மட்டுமே, உயர் அதிகாரிகளின் அனுமதியுடன் மிகக் குறைந்த நேரத்தில் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
அறிவுறுத்தல்கள்
மின்வாரியத்தின் கடுமையான அறிவுறுத்தல்கள்
மின்வாரிய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், தேர்வு மையங்களுக்குத் தடையற்ற மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இரவு நேரங்களில் மாணவர்கள் தடையின்றிப் படிப்பதற்கு ஏதுவாக மின் விநியோகத்தில் எவ்வித குறைபாடும் இருக்கக் கூடாது என்று களப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோடை காலம் தொடங்கி வருவதால் மின் தேவை அதிகரித்தாலும், மாணவர்களின் கல்வி நலனே முக்கியம் என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல்
ஏப்ரல் மாதம் வரை அமல்
இந்தத் தடையற்ற மின் விநியோக நடைமுறையானது, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அனைத்தும் நிறைவடையும் வரை, அதாவது ஏப்ரல் மாதம் வரை அமலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பொருந்தும். இந்த அறிவிப்பானது தேர்வு பதற்றத்தில் இருக்கும் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.