டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி
வரும் ஜனவரி 26ம் தேதி இந்திய குடியரசு தினம் கொண்டாடவுள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் முப்படைகள், மத்திய ஆயுத படைகள், பிற துணைப்படைகள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் சார்பாக அலங்கார ஊர்திகளில் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். இதற்காக அலங்கார ஊர்திகளின் மாதிரி படங்கள் மற்றும் 3டி அனிமேஷன் படங்களை அனுப்பி வைக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த அலங்கார ஊர்திகளின் மாதிரிகள் ஏழு கட்டமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தேர்வு செய்யப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து, 2023ம் ஆண்டின் குடியரசு தின விழாவிற்கு தமிழக அரசு சார்பாக மகளிர் சாதனையாளர்கள் உள்ளிட்ட 3 ஊர்தி மாதிரிகள் அனுப்பிவைக்கப்பட்டது.
கடந்த 2022ம் ஆண்டு தமிழகத்தின் அலங்கார ஊர்தி டெல்லி அணிவகுப்பில் இடம்பெறவில்லை
இதனையடுத்து ஏழு கட்ட ஆய்வுகளுக்கு பின்னர் தமிழகத்தின் அலங்கார ஊர்தி டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்குபெற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதே போல், அசாம், குஜராத், ஆந்திரா, ஹரியானா, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட 16 மாநில அலங்கார ஊர்திகள் மற்றும் யூனியன் பிரதேச மாநிலங்களின் ஊர்திகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு குடியரசு தினத்திற்கு வ.உ.சி., வேலுநாச்சியார், பாரதியார், ஆகியோரை மையமாக வைத்து தமிழகம் சார்பில் வாகனம் தயாரிக்கப்பட்டது. ஆனால் அதற்கு மத்திய பாதுகாப்பு துறை வல்லுநர் குழு அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.