சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் சாமி தரிசனம்
தமிழகத்தில் மகா சிவராத்திரி கடந்த 18ம் தேதி மிக விமர்சையாக அனைத்து சிவன் கோயில்களிலும் நடைபெற்றது. பக்தர்களும் சிறப்பான பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர். இதன் ஓர் பகுதியாக, கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் நாட்டியாஞ்சலி விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி 42ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா தெற்கு ரத வீதியில் ஓர் தனியார் வளாகத்தில் தொடர்ந்து 5 நாட்கள் நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று(பிப்.,22) பங்கேற்றார். இந்த விழா நேற்றோடு முடிவடைந்த நிலையில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார்.
'பூர்ண கும்ப' மரியாதையுடன் ஆளுநருக்கு வரவேற்பு
இதனை தொடர்ந்து இன்று(பிப்.,23) காலை சுமார் 8 மணியளவில் நடராஜர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய தனது குடும்பத்தினருடன் தமிழக ஆளுநர் வருகை தந்தார். அவரை கோயில் தீட்சிதர்கள் சார்பில் 'பூர்ண கும்ப' மரியாதையுடன் வரவேற்த்தனர். இதனையடுத்து கனசபை மீது ஏறி குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர், நந்தனார் மடத்திற்கு சென்று நந்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யவுள்ளார் என்று கூறப்பட்டது. இதற்கிடையே, ஆளுநருக்கு கறுப்புக்கொடி காட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முயற்சி செய்ய வாய்ப்புள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.