வாக்காளர் தகவல் சீட்டு மட்டும் இருந்தால் ஓட்டு போட முடியாது! ஏன் தெரியுமா? முழு விவரம்
செய்தி முன்னோட்டம்
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்களுக்கு உதவ தேர்தல் ஆணையம் வாக்காளர் தகவல் சீட்டு விநியோகிக்கும் பணியைத் தொடங்கியுள்ளது. அந்தந்தப் பகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (பிஎல்ஓ) நேரடியாக வாக்காளர்களின் வீடுகளுக்கே வந்து இந்தச் சீட்டுகளை வழங்கி வருகின்றனர். ஏப்ரல் 17 ஆம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் இந்தச் சீட்டுகள் வழங்கப்பட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முக்கிய விவரங்கள்
தகவல் சீட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய விவரங்கள்
இந்த முறை வழங்கப்படுபவை வெறும் ஸ்லிப் மட்டுமல்ல, வாக்காளர் எளிதாகத் தனது விபரங்களைக் கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொகுதி மற்றும் வரிசை எண்: நீங்கள் எந்தத் தொகுதியைச் சேர்ந்தவர், உங்கள் பாகம் (Part Number) மற்றும் வரிசை எண் (Serial Number) என்ன என்பது பெரிய எழுத்துக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி முகவரி: நீங்கள் எங்கே சென்று ஓட்டு போட வேண்டும் என்ற தெளிவான முகவரி இதில் இருக்கும். தேதி மற்றும் நேரம்: ஏப்ரல் 23 அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்ற விபரம் இடம்பெற்றுள்ளது.
முக்கிய எச்சரிக்கை
ஏன் இதை மட்டும் வைத்து வாக்களிக்க முடியாது?
தேர்தல் ஆணையத்தின் மிக முக்கியமான விதிமுறை என்னவென்றால், இந்த வாக்காளர் தகவல் சீட்டை அடையாள ஆவணமாக பயன்படுத்த முடியாது. இதற்கு முன்பு வழங்கப்பட்ட சீட்டுகளில் புகைப்படம் இருக்கும், ஆனால் தற்போது வழங்கப்படும் சீட்டுகளில் புகைப்படம் இடம் பெறாது. எனவே, வாக்குச்சாவடியில் உங்கள் விபரங்களை விரைவாகக் கண்டறிய மட்டுமே இந்தச் சீட்டு பயன்படும்.
தேவையான ஆவணங்கள்
வாக்களிக்கத் தேவையான மாற்று அடையாள அட்டைகள்
வாக்களிக்கச் செல்லும்போது தகவல் சீட்டுடன் பின்வரும் ஏதேனும் ஓர் அசல் அடையாள அட்டையைக் கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும்: 1. வாக்காளர் அடையாள அட்டை 2. ஆதார் அட்டை 3. பான் கார்டு 4. ஓட்டுநர் உரிமம் 5. கடவுச்சீட்டு 6. அரசு ஊழியர்களுக்கான அடையாள அட்டை மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்கள்.
பிஎல்ஓ
உங்கள் பகுதி பிஎல்ஓ மொபைல் எண்ணைக் கண்டுபிடிப்பது எப்படி?
உங்களுக்கு இன்னும் தகவல் சீட்டு கிடைக்கவில்லை என்றால், உங்கள் பகுதி பிஎல்ஓவை தொடர்பு கொள்ளக் கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றலாம்: முதலில் https://voters.eci.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும். இதில் 'Search in Electoral Roll' என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து, உங்கள் EPIC (வாக்காளர் அட்டை) எண்ணை உள்ளிடவும். தமிழ்நாடு மற்றும் தமிழ் மொழியைத் தேர்ந்தெடுத்து, 'Captcha' குறியீட்டை உள்ளிட்டு 'Search' கொடுக்கவும். உங்கள் விபரங்கள் திரையில் தோன்றும். அதில் 'View Details' கிளிக் செய்தால், உங்கள் வாக்குச்சாவடி விபரங்களுடன், உங்கள் பகுதி பிஎல்ஓவின் பெயர் மற்றும் தொடர்பு எண் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.