நாவலூர் சுங்கச்சாவடி கட்டணத்தினை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
'கள ஆய்வில் முதல் அமைச்சர்' என்னும் திட்டத்தின் கீழ் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள சென்றுள்ளார். அப்போது மேற்கூறிய 3 மாவட்டங்களின் மகளிர் குழு, சிறு-குறு தொழிற்சங்கம், தொழில் முனைவோர் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு கூட்டமைப்பு சங்க நிர்வாகிகளை சந்தித்து அவரது கோரிக்கைகளை கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து இன்று(அக்.,18)காலை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களின் வளர்ச்சித்திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டத்தினை நடத்தினார். இதில் 28 துறைச்சார்ந்த மாவட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பேசியவர், 'அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களும் தினமும் ஊடகங்களில் செய்திகளை பார்ப்பதோடு, செய்தித்தாள்களையும் படிக்க வேண்டும்' என்று கூறினார்.
மின்கட்டணத்தில் சலுகை அறிவித்த முதல்வர்
'அப்பொழுது தான் தங்கள் மாவட்டத்தின் நிறை-குறைகள் அறியப்பட்டு உடனடியாக அதற்கான தீர்வினை காண முடியும்'என்றும் எடுத்துரைத்தார். அதேபோல் 'தீர்வுகண்ட பிரச்சனைகளின் விவரங்களை ஊடகங்களுக்கு தெரிவிக்கவேண்டும்' என்றும் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து அவர், 'விளிம்புநிலை மக்களுக்கான திட்டங்கள் சரியான நேரத்தில் எவ்வித குறையுமில்லாமல் சென்றடைய வேண்டும். கட்டுமானப்பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும்' என்று தெரிவித்தார். மேலும், 'தென்சென்னை மக்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு நாவலூர் சுங்கச்சாவடி கட்டணம் நாளை(அக்.,19)முதல் ரத்து செய்யப்படும்' என்றும் அறிவித்துள்ளார். அதேபோல், '10 வீடுகளுக்கும் குறைவாகவுள்ள சிறு-குடியிருப்புகளின் பொது பயன்பாட்டிற்கான மின்கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.8ல் இருந்து ரூ.5.5ஆக-குறைத்து சலுகை அளிக்கப்படுகிறது' என்றும், 'ஏழை எளிய மக்களுக்கான அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்தில் செயல்முறைக்கு வரவேண்டும்' என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.