கரூர் மாவட்ட குளித்தலை கபடி போட்டியில் பங்கேற்ற இளைஞர் திடீர் மரணம் - தமிழக முதல்வர் இரங்கல்
திண்டுக்கல் மாவட்டம் காசக்கரன்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ், இவரது மகன் மாணிக்கம்(26) கபடி விளையாட்டு வீரர். இவர் கரூரில் உள்ள ஒரு டெக்ஸ்டைலில் பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று(பிப்.,19) கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் நடைபெற்ற கபடி போட்டிக்கு விளையாடுவதற்காக அவர் அங்கு சென்றுள்ளார். போட்டியில் கலந்துகொண்ட மாணிக்கம் முதல் இரண்டு சுற்றுகளில் வெற்றிபெற்றுள்ளார். தொடர்ந்து மூன்றாம் சுற்று போட்டிக்காக காத்துக்கொண்டிருந்த நிலையில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. தனக்கு அருகில் இருந்த அவரது நண்பர்களிடம் நெஞ்சு வலிப்பதாக அவர் கூறியுள்ளார். இதனையடுத்து அவர்கள் மாணிக்கத்தை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அருகில் இருந்த அய்யர்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளார்கள். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
உயிரிழந்த கபடி வீரர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதி
அதனையடுத்து அவரின் மேல் சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றுள்ள நிலையில், வழியிலேயே மாணிக்கம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் மரணமடைந்த மாணிக்கத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. கபடி விளையாட வந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்த மாணிக்கத்தின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணமாக அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கபடி வீரர் மாணிக்கத்தின் மரணம் தனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது என்றும், அவரை இழந்து துடிக்கும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.