கின்னஸ் சாதனையை நோக்கி 'வீலிங்' செய்யும் கோவை இளைஞர்
செய்தி முன்னோட்டம்
கோவை காளப்பட்டி பகுதியை சேர்ந்த அருண் என்பவர், மின் வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார்.
சிறு வயதில், பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் போது, சைக்கிளில் ஸ்டண்ட் செய்வது பழக்கமாகி, தற்போது அதில் பெரிய அளவில் சாகசம் செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற முயன்று வருகிறார்.
அருண், நீண்ட தூரம் ஒற்றை சக்கரத்திலேயே, வீலிங் செய்து சைக்கிளை ஓட்டுகிறார்.
இதுபோன்று வீலிங் செய்யும்போது, பலமுறை கீழே விழுந்து கை கால் முறிவுகளும் இவருக்கு ஏற்பட்டுள்ளதாம்.
முதலில் இதனை பார்த்த சுற்றுவட்டாரத்தினரும், போக்குவரத்து போலீசாரும், இதுபோன்ற சாகசங்களை, ரோட்டில் செய்வது ஆபத்து என அவரை எச்சரித்துள்ளனர் .
எனினும், இது ஒரு வகை விளையாட்டுதான் என்று தன்னை தானே ஊக்கப்படுத்திக்கொண்டு பயிற்சியை தொடர்ந்தார்.
Cycle Wheeling
கின்னஸ் சாதனை
தனிப்பயிற்சி எடுத்துக்கொள்ள வசதி இல்லாத காரணத்தினால், தானே ஆள் நடமாட்டம் இல்லாத சாலைகளில், பயிற்சி எடுத்து வருகிறார்.
சில தனியார் சாகச நிகழ்ச்சிகளில் பங்கேற்று சைக்கிள் சாகசங்களை செய்து வரும் இவருக்கு, கோவை நகரை சுற்றி, 20 கிலோ மீட்டருக்கு, ஒற்றை சக்கரத்தில் (wheeling) சைக்கிள் ஓட்ட வேண்டும் என்ற குறிக்கோள் உள்ளதாக கூறுகிறார்.
"சைக்கிள் 'வீலிங்' செய்வதால், பலரும் என்னை 'வீலிங்' அருண் என்றே அழைக்க தொடங்கியுள்ளனர்," என்று பெருமிதமாக கூறுகிறார்.
"நான் 20 ஆண்டுகளாக கின்னஸ் புத்தகத்தில் சாதனை படைக்க முயற்சி செய்து வருகிறேன். ஒற்றை சக்கரத்தில், 20 கிலோ மீட்டர் தூரத்தை, ஒரு மணி நேரத்தில் கடப்பதே எனது இலக்கு. இதுவும் ஒரு 'ஸ்போர்ட்' தான்" என்று கூறியுள்ளார்.