இந்தியாவில் தயாராகும் அமெரிக்காவின் மிக சக்திவாய்ந்த ஏவுகணை! டாடா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் முன்னணி பாதுகாப்புத் தொழில் நிறுவனமான டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட், அமெரிக்காவின் சக்திவாய்ந்த ஜாவெலின் எதிர்ப்பு பீரங்கி ஏவுகணைகளை இந்தியாவில் இணைந்து தயாரிப்பதற்காக முக்கியப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஜாவெலின் ஏவுகணையைத் தயாரிக்கும் அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் மற்றும் ராய்ஸியான் ஆகிய நிறுவனங்களின் கூட்டமைப்பான ஜாவெலின் ஜாயிண்ட் வென்ச்சர் உடன் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் ஏவுகணையின் இறுதி இணைப்புப் பணிகள் மற்றும் சில முக்கிய உதிரிபாகங்கள் உற்பத்தி இந்தியாவில் நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது.
டாடா நிறுவனம்
டாடா நிறுவனத்தை முதன்மைப் பங்காளியாகத் தேர்வு செய்த அமெரிக்கா
இந்திய ராணுவம் அமெரிக்க அரசிடமிருந்து அயல்நாட்டு ராணுவ விற்பனை திட்டத்தின் கீழ் ஜாவெலின் ஏவுகணைகளைக் கொள்முதல் செய்வதற்கான சலுகை மற்றும் எல்ஓஏவில் கையெழுத்திட்ட சில நாட்களிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவில் உள்ள பல்வேறு முன்னணி பாதுகாப்புத் துறை நிறுவனங்களின் உற்பத்தித் திறன் மற்றும் அனுபவங்களை ஆய்வு செய்த அமெரிக்க நிறுவனங்கள், இறுதியாக டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனத்தைத் தங்களது முதன்மைத் தொழில்முறை கூட்டாளியாகத் தேர்வு செய்துள்ளன.
இத்திட்டம் இந்தியாவில் உள்ளூர் உதிரிபாக விநியோகிப்பாளர்களின் பங்களிப்பை அதிகரித்து நாட்டின் பாதுகாப்பு உற்பத்தித் தளத்தை மேலும் வலுப்படுத்தும்.
கொள்முதல்
100 ஏவுகணைகள் மற்றும் 25 லாஞ்சர்கள் கொள்முதல்
முன்னதாக வெளியான தகவல்களின்படி, இந்திய ராணுவம் முதற்கட்டமாக அமெரிக்காவிடமிருந்து 100 ஜாவெலின் ஏவுகணைகள் மற்றும் 25 லாஞ்சர்களை நேரடியாகக் கொள்முதல் செய்யவும், அதனுடன் இணைந்த தொழில்நுட்பப் பரிமாற்றத்தின் கீழ் இந்தியாவில் அந்த ஏவுகணைகளை உற்பத்தி செய்யவும் திட்டமிட்டிருந்தது.
அமெரிக்க வெளியுறவுத் துறை இதற்கு ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தற்போது கையெழுத்தாகியுள்ள எல்ஓஏ ஒப்பந்தம் அடுத்தகட்டமாக பணம் செலுத்துதல் மற்றும் விநியோகம் தொடங்குவதற்கான இறுதி முக்கியப் படியாகும்.
இந்த கூட்டுத் தயாரிப்பு முயற்சி இந்திய ஆயுதப்படைகளுக்கு ஏவுகணைகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதோடு அவர்களின் போர் ஆயத்த நிலையையும் மேம்படுத்தும்.
முக்கியத்துவம்
ஜாவெலின் ஏவுகணையின் சிறப்பம்சங்கள் மற்றும் முக்கியத்துவம்
ஜாவெலின் என்பது தோளில் வைத்து இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு கையடக்க எதிர்ப்பு பீரங்கி ஏவுகணையாகும்.
இது ஃபயர் அண்ட் ஃபர்கெட் என்ற அதிநவீனத் தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. அதாவது ஏவுகணையை ஏவிய பிறகு இலக்கை நோக்கிக் கையால் வழிநடத்த வேண்டிய அவசியமில்லை.
அதன் அகச்சிவப்பு கதிர் உணரி தானாகவே இலக்கைக் கண்டறிந்து தாக்கும்.
ரஷ்யா-உக்ரைன் போரில் உக்ரைனியப் படைகளால் ரஷ்ய பீரங்கிகளுக்கு எதிராக பரவலாக பயன்படுத்தப்பட்டு இது உலகளவில் பெரும் கவனிப்பைப் பெற்றது.
புத்துணர்ச்சி
இந்தியப் பாதுகாப்பு உற்பத்தித் துறைக்கு மாபெரும் புத்துணர்ச்சி
இந்தியாவில் அமைக்கப்படவுள்ள இந்த புதிய உற்பத்தி மையம் உள்ளூர் விநியோகஸ்தர்களுக்குப் புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்குவதோடு, அதிநவீன தொழில்நுட்பத் துறைகளில் ஆயிரக்கணக்கான உயர் திறன் கொண்ட வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.
உலகளவில் ஜாவெலின் ஏவுகணைகளுக்கான தேவை அதிகரித்து வரும் இந்த வேளையில், இந்தியாவில் நடைபெறும் உற்பத்தி உலகளாவிய விநியோக சங்கிலியை சீராக வைத்திருக்கவும் உதவும்.
மேலும், இந்த ஒப்பந்தம் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உத்திசார் உறவை வலுப்படுத்தி, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பையும் ஸ்திரத்தன்மையையும் மேம்படுத்தும் எனப் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.