38 பேருக்கு தமிழ்ச் செம்மல் விருது, 10 பேருக்கு சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருது வழங்கினார் தமிழக முதல்வர்
சென்னை தலைமை செயலகத்தில் இன்று தமிழ் வளர்ச்சி துறை சார்பில் நிகழ்வு ஒன்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் புது டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு 'தமிழ் இலக்கியவியல்' என்ற தனித்துறையை உருவாக்க ரூ.5 கோடி காசோலையை நிதியாக வழங்கினார். இந்த காசோலையை அந்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரான பேராசிரியர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட் அவர்கள் பெற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து தமிழக அரசால் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழரறிஞர்களான நெல்லை செ.திவான், விடுதலை ராஜேந்திரன், நா.மம்மது முதலியோரின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதால் ஒவ்வருவருக்கும் ரூ.15 லட்சத்திற்கான காசோலையை தமிழக முதல்வர் வழங்கினார். மேலும், மறைந்த தமிழரறிஞர் நெல்லை கண்ணன் நூல்களுக்கு 15 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கிய முதல்வர்,
2021ம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் மற்றும் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகள்
மற்ற மறைந்த அறிஞர்களான கந்தர்வன் (எ) நாகலிங்கம், சோமலெ, முனைவர் ந.ராசையா, தஞ்சை பிரகாஷ் ஆகியோரது நூல்களுக்கு தலா ரூ.10 லட்சத்திற்கான காசோலையை அவர்களின் மரபுரிமையரிடம் வழங்கினார். இதனையடுத்து, 2021ம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதினை 38 பேருக்கு வழங்கப்பட்டது. அதன்படி விருதுடன் விருது தொகையாக தலா ரூ.25,000-திற்கான காசோலை, பாராட்டு சான்றிதழ் மற்றும் பொன்னாடை ஆகியவற்றை வழங்கி தமிழக முதல்வர் சிறப்பித்தார். மேலும் 2021ம் ஆண்டிற்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது 10 பேருக்கு கொடுக்கப்பட்டது. விருதுடன், விருது தொகையாக ரூ.2 லட்சத்திற்கான காசோலை மற்றும் தகுதியுரை வழங்கிய முதல்வர் அவர்களுக்கு பொன்னாடையும் அணிவித்து கவுரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.