LOADING...
வெயிலுக்கு நடுவே ஜில்லென்று ஒரு செய்தி! தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் மழை
சென்னை, நீலகிரி, கோவைக்கு வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு

வெயிலுக்கு நடுவே ஜில்லென்று ஒரு செய்தி! தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் மழை

எழுதியவர் Sekar Chinnappan
Mar 21, 2026
06:06 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் கோடை வெயில் இப்போதே சுட்டெரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மார்ச் மாத வெப்பத்திலிருந்து தப்பிக்கச் சற்று நிம்மதி தரும் செய்தியைச் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. மன்னார் வளைகுடா முதல் வடக்கு உள் கர்நாடகா வரை நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்கள் இங்கே:-

மழைக்கு வாய்ப்பு

மழை பெய்ய வாய்ப்புள்ள இடங்கள்

இன்று (மார்ச் 21, 2026): தமிழகத்தின் ஓரிரு இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். மார்ச் 22: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. மார்ச் 23 & 24: கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். மார்ச் 27: மீண்டும் தமிழகத்தின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. மழை ஒருபுறம் இருந்தாலும், மார்ச் 23 முதல் மார்ச் 25 வரை தமிழகத்தின் பல பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உள் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும்.

சென்னை

சென்னை வானிலை நிலவரம்

சென்னையைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26°C ஆகவும் இருக்கக் கூடும். வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மார்ச் 25 வரை மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றம் இன்றி இயல்பாகவே காணப்படும்.

Advertisement