தமிழகத்தில் ஆகஸ்ட் 26 வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஆகஸ்ட் 21 ஆம் தேதியான இன்று தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை நிலவரம்
மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் வட கடலோர மாவட்டங்களின் மழை நிலவரம்
ஆகஸ்ட் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் வட கடலோரத் தமிழகப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தமிழக மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
அதேபோன்று ஆகஸ்ட் 26 ஆம் தேதியன்றும் மாநிலத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை பதிவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.
கோவை
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை
ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதே காலகட்டத்தில், இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோரத் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஏனைய பகுதிகளில் லேசான மழையும் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை
உள் மாவட்டங்களில் 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயரும்
மழை எச்சரிக்கைக்கு இடையே, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் நண்பகல் வேளையில் இயல்பை விட வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும் என்பதால், பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னை
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை, நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.