5,000 பேருக்கு வேலை வாய்ப்பு: மதுரமங்கலத்தில் அமைய உள்ள செமிகண்டக்டர் பூங்கா
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டின் தொழில்துறை மற்றும் மேம்பட்ட மின்னணு உற்பத்தியில் மிகப்பெரிய பாய்ச்சலாக, காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலத்தில் ₹175 கோடி மதிப்பீட்டில் சிறப்பு செமிகண்டக்டர் பூங்கா அமைக்கப்பட உள்ளதாக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. சிப்காட் சார்பில் உருவாக்கப்பட உள்ள இந்தப் பூங்கா, உற்பத்தித் தொழிற்சாலைகள் மட்டுமின்றி, அதிநவீன ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி (R&D) மையங்கள், வடிவமைப்பு மற்றும் சோதனைக் கூடங்களை உள்ளடக்கிய முழுமையான தொழில்துறை சூழலாக அமைய உள்ளது.
சிறப்பம்சங்கள்
இத்திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்
இப்பூங்காவின் மூலம் சுமார் ₹2,000 கோடி வரை புதிய முதலீடுகளை ஈர்க்கவும், நேரடி மற்றும் மறைமுகமாக 5,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
'தமிழ்நாடு செமிகண்டக்டர் மிஷன்-2030' திட்டத்திற்காக ₹500 கோடி நிதியும், சென்னையில் சிப் வடிவமைப்பு நிறுவனங்களுக்காக ₹100 கோடியில் 'Semiconductor Fabless Lab' அமைக்கும் பணிகளும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் மொத்த மின்னணு சாதனங்கள் ஏற்றுமதியில் 33 சதவீதப் பங்களிப்புடன் (9.56 பில்லியன் அமெரிக்க டாலர்) தமிழ்நாடு ஏற்கனவே முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுரமங்கலம் செமிகண்டக்டர் பூங்கா அமைப்பதன் மூலம் எலக்ட்ரானிக்ஸ், embedded systems மற்றும் சிப் டிசைனிங் படித்த தமிழக இளைஞர்களுக்கு அதிக அளவிலான உயர்தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.