மனப்பாட முறைக்கு முற்றுப்புள்ளி! 6-10 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தை கொண்டு வர தமிழக அரசு திட்டம்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT), தமிழ்நாடு பாடத்திட்டக் கட்டமைப்பு-2025 இன் கீழ் 6 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கான புதிய வரைவு பாடத்திட்டத்தை வெளியிட்டுள்ளது. மாணவர்களிடையே மனப்பாடம் செய்யும் முறையைக் குறைத்து, சுயசிந்தனை, திறன் சார்ந்த கற்றல் மற்றும் நிஜ உலக அனுபவங்கள் சார்ந்த கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பாடப்புத்தகங்களில் வொர்க் ஷீட்கள் சேர்க்கப்பட்டு, மாணவர்கள் தாங்களாகவே செய்து கற்றுக் கொள்ளும் 'Do It Yourself' முறை ஊக்குவிக்கப்படுகிறது.
கற்றல் முறை
STEAM கல்வி மற்றும் புதிய மதிப்பீட்டு முறை
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை மற்றும் கணிதம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் STEAM வழி கற்றல் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
மேலும், டிஜிட்டல் எழுத்தறிவு, இணைய பாதுகாப்பு (Cyber Safety), போலிச் செய்திகளைக் கண்டறிதல் மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் குறித்த நிதியறிவு போன்ற 21ஆம் நூற்றாண்டின் அத்தியாவசிய திறன்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
சமூக உள்ளடக்கம், பாலினச் சமத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வுகள் பாடங்களில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பீடு செய்ய, வெறும் தேர்வுகளை மட்டுமே சார்ந்திருக்காமல் திட்டம் சார்ந்த மற்றும் செயல்முறை சார்ந்த மதிப்பீட்டு முறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
கருத்து
கருத்து தெரிவிக்க ஆகஸ்ட் 31 வரை அவகாசம்
கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த வரைவு பாடத்திட்டத்தை ஆய்வு செய்து தங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் ஆகஸ்ட் 31-க்குள் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் வரைவு பாடத்திட்டத்தைக் காண https://tnschools.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.