தவெக கூட்டணியில் காங்கிரஸிற்கு ராஜ்யசபா சீட், வேட்பாளரை அறிவித்தது டெல்லி மேலிடம்; யார் இந்த பிரவீன் சக்கரவர்த்தி?
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்திற்கான இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சியின் முக்கியப் புள்ளியான பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுவார் என அகில இந்திய காங்கிரஸ் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக, தமிழகத்தில் காலியாக உள்ள இந்த ஒற்றை ராஜ்யசபா இடம் கூட்டணி கட்சியான காங்கிரஸிற்கு ஒதுக்கப்படுவதாகத் தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவருமான விஜய் கடந்த புதன்கிழமை அன்று அறிவித்திருந்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மயிலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.வி.சண்முகம், தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் ஏற்பட்ட காலிப்பணியிடத்தை நிரப்பவே வரும் ஜூன் 18-ம் தேதி இந்த இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
தூது
ப.சிதம்பரம் நடத்திய தூது; முதல்வர் விஜய் எடுத்த முடிவு
தமிழகத்தில் தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் கட்சி அங்கம் வகித்து வரும் நிலையில், இந்த ராஜ்யசபா சீட்டை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆகியோர் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தச் சமரச முயற்சிகளின் பலனாக, காங்கிரஸ் கட்சிக்கு இந்த இடத்தை ஒதுக்க முதல்வர் விஜய் சம்மதம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, டெல்லியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலில், தமிழகத்திற்கான வேட்பாளராகப் பிரவீன் சக்கரவர்த்தியின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.