மிக கனமழைக்கு வாய்ப்பு; மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக அரசு அவசர எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியின் காரணமாக, காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழக அரசு மாநிலத்தின் அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் (IMD) கனமழை குறித்த முன்னறிவிப்பைப் பின்பற்றி, வரவிருக்கும் நாட்களில் ஏற்படக்கூடிய சேதங்களைத் தணிக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. பேரிடர் அபாயமுள்ள வடகிழக்கு, டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்கள் குறித்து ஆலோசனையில் குறிப்பாக தமிழக அரசு எடுத்துரைத்து உள்ளது.
கனமழை
கனமழைக்கான மாவட்டங்கள்
அடுத்த 24 மணி நேரத்திற்குள், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களும் அடுத்த 24-48 மணி நேரத்தில் தீவிர மழையை எதிர்கொள்ளக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ள அபாயம் உள்ள பகுதிகள், தாழ்வான குடியிருப்புகள் மற்றும் வடிகால் அமைப்புகளை உன்னிப்பாகக் கண்காணித்து, நீர்த்தேக்கம் மற்றும் தொடர்புடைய ஆபத்துகளைத் தடுக்க உள்ளூர் நிர்வாகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
மீனவர்கள்
மீனவர்களுக்கு எச்சரிக்கை
மன்னார் வளைகுடா மற்றும் கன்னியாகுமரி கடற்பகுதிகளில் காற்று மணிக்கு 35-45 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அரசு வலியுறுத்தியுள்ளது. மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மூலம் வானிலை நிலவரம் தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவசரகாலப் பதிலளிப்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.