கருத்தரிப்பு முதல் பிரசவம் வரை கர்ப்பிணிகளுக்கு தமிழக அரசு வழங்கும் சேவைகள்
தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு அரசு பலதரப்பட்ட வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அதனை பற்றி தெரியாத நபர்களுக்கு இச்செய்தி தொகுப்பு பெரும் உதவியாக இருக்கும். தமிழகத்தில் ஒரு பெண் கர்ப்பம் தரித்ததும் அருகில் உள்ள சுகாதார நிலையத்திற்கு சென்று, சுகாதாரத்துறையின் மூலம் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மென்பொருளில் தங்களது முழு விவரங்களையும், ஆதார் எண், வங்கி கணக்கு போன்ற அவர்களது அடையாளங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதையடுத்து, கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன சாப்பிடலாம், சாப்பிடக்கூடாது என்று அந்தந்த சுகாதார நிலையத்தில் உள்ள செவிலியர்கள் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். கர்ப்பக்காலத்தில் கர்ப்பிணிகளுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளையும் அரசு மருத்துவமனையில் இலவசமாக பெறலாம்.
ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் சுகாதார நிலையங்களில் கர்ப்பிணி பெண்களுக்கு உடல்நிலை சரிபார்த்தல்
மேலும் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் சுகாதார நிலையங்களில் கர்ப்பிணி பெண்களின் உடல்நிலை சரிபார்க்கப்பட்டு, மருந்துகள் மற்றும் சத்தான உணவு வழங்கப்படும். அதோடு, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி பெறும் திட்டம் குறித்தும் ஆலோசனை வழங்கப்படுகிறது. அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படும் கர்ப்பிணி பெண்களுக்கு அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சையும் அளிக்க அனைத்து வசதிகளும் உள்ளது. குழந்தை பிறந்த பிறகும் தாய்க்கு தேவையான 11 வகை சித்த மருத்துவ மூலிகை அடங்கிய பெட்டகம் வழங்கப்படுகிறது. குழந்தைக்கு தேவையான பொருட்கள் அடங்கிய பெட்டகமும் மருத்துவமனையில் வழங்கப்படுவதோடு, கர்ப்பக்காலத்தில் தாய்க்கு போடவேண்டிய தடுப்பூசியும், பின்னர் குழந்தைக்கு தேவையான தடுப்பூசியும் இலவசமாக போடப்படுகிறது குறிப்பிடத்தக்கது.