தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்கள் கொண்ட 'மக்கள் ஐடி' - தமிழக அரசின் புது திட்டம்
இந்தியாவில் மத்திய அரசு சார்பாக ஏற்கனவே அனைத்து மக்களுக்கும் ஆதார் கார்டு என்னும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தனி நபர் அடையாள அட்டையாக கருதப்படும் இந்த ஆதார் கார்டானது சிம், வங்கி பரிவர்த்தனை, ரேஷன் கார்டு, பான் கார்டு போன்ற பல்வேறு சேவைகள் மற்றும் அரசின் சலுகைகளை பெற இந்தியாவில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 12 இலக்கங்களை கொண்டுள்ள இந்த ஆதார் கார்டு மிக முக்கிய ஆவணமாக கருதப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ள இந்த ஆதார் கார்டை போலவே, தமிழகத்தில் வசிக்கும் மக்களுக்கு 'மக்கள் ஐடி' என்னும் அடையாள அட்டையை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஐடி எண் தயாரிப்பதற்கான மென்பொருள் தயாரானதும் மக்கள் கணக்கெடுப்பு எடுக்கப்படும்
10 முதல் 12 இலக்கங்களை கொண்ட இந்த 'மக்கள் ஐடி எண்' ஆனது சமூக நலத்திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்க பெரிதும் உதவும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் மாநில குடும்ப தரவுத்தளம் ஒன்று தனியாக உருவாக்கப்படவுள்ளது. மக்களுக்கு அடையாள எண் வழங்க மென்பொருள் தயாரிப்பதற்கு டெண்டரும் விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, மென் பொருள் தயாராகி ஒரு சில மாதங்களில் பயன்பாட்டிற்கும் வரும் பட்சத்தில் மக்கள் கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆதார் கார்டுக்கு போல் இந்த அடையாள அட்டைக்கும் கண் விழித்திரை, கைரேகை போன்ற ஆவணங்கள் எடுக்கப்பட்டு 'மக்கள் ஐடி' வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.