பயணத்தை ஒத்திவையுங்கள்! சபரிமலை பக்தர்களுக்குத் தமிழ்நாடு அரசு மற்றும் தேவசம்போர்டு அவசர எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு அபாயம் காரணமாக, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லத் திட்டமிட்டுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த பக்தர்கள் தங்களது பயணத்தைத் தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு தமிழக அரசு மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு இணைந்து அவசர எச்சரிக்கை விடுத்துள்ளன. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி புகழ்பெற்ற நிரபுத்தரி பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறவுள்ளன. இந்த சிறப்புப் பூஜைக்காக தமிழ்நாட்டிலிருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கேரளாவுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்த நிலையில், தற்போதைய மோசமான வானிலை காரணமாக பத்தனம் திட்டா மாவட்ட நிர்வாகம் மற்றும் தேவசம்போர்டு வெளியிட்ட அறிவுறுத்தலின்படி, பக்தர்கள் தங்களது பயண முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
நிலச்சரிவு அபாயம்
பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு & நிலச்சரிவு அபாயம்
தொடர்மழை காரணமாகப் பம்பை ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், மலைப்பாதைகள் மற்றும் வனப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் நிலவுகிறது.
இதனால் ஆபத்தான பயணங்களைத் தவிர்க்குமாறும், ஆகஸ்ட் 16 முதல் 21 வரை மலையாள மாதமான சிங்கம் மாத பூஜைகளுக்காகவோ அல்லது ஆகஸ்ட் 24 முதல் 28 வரை நடைபெறும் ஓணம் திருவிழா பூஜைகளின் போதோ பக்தர்கள் தங்களது தரிசனத்தைத் திட்டமிட்டுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் இறங்குவதைத் தவிர்க்குமாறும், உள்ளூர் நிர்வாகம் மற்றும் காவல்துறையினரின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சூழ்நிலை சீரடையும் வரை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தேவையின்றி பயணங்கள் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.