கடற்கரையில் திருமணம் செய்ய ஆசையா? நடுத்தர மக்களுக்காகவே தமிழக அரசின் 'பீச் வெட்டிங்' திட்டம்; கட்டணம் மற்றும் முன்பதிவு விவரங்கள்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், நடுத்தர மக்களின் "கடற்கரைத் திருமண" கனவை நனவாக்கவும் தமிழக அரசு ஒரு அதிரடித் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம், பொதுவாக பெரும் பணக்காரர்கள் மட்டுமே ஈசிஆர் பகுதிகளில் லட்சக்கணக்கில் செலவு செய்து நடத்தும் பீச் வெட்டிங்கை, இனி சாதாரண மக்களும் குறைந்த செலவில் நடத்த முடியும். முதற்கட்டமாக, மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு பீச் ரிசார்ட்டின் பிரத்யேகக் கடற்கரை பகுதியில் இந்தத் திருமணங்களை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தனியார் ரிசார்ட்டுகளுடன் ஒப்பிடுகையில், இங்கு மிகக் குறைந்த விலையில் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் திருமணத்தை நடத்த முடியும்.
கட்டணம்
கட்டண விவரங்கள்
குறைந்த பட்ஜெட்டில் ஒரு பிரம்மாண்ட திருமணத்தை உறுதி செய்யத் தமிழக அரசு நிர்ணயித்துள்ள கட்டணங்கள் பின்வருமாறு: முன்பதிவு & பராமரிப்பு கட்டணம்: சுமார் ₹10,000. உணவு (ஒரு நபருக்கு): சைவம் ₹700லிருந்து தொடங்குகிறது; அசைவம் சுமார் ₹1,100லிருந்து தொடங்குகிறது. தங்குமிடம்: 22 மணி நேரத்திற்கு ரிசார்ட் அறைகள் சுமார் ₹5,000 விலையில் கிடைக்கின்றன. இதர செலவுகள்: அலங்காரம், மேடை மற்றும் விளக்கு அமைப்புகளைத் திருமண வீட்டினரே தங்களுக்குப் பிடித்தமான முறையில் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பம்
விண்ணப்பிப்பது எப்படி?
இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புவோர் மற்றும் மேலதிகத் தகவல்களைத் தெரிந்து கொள்ள விரும்புவோர் https://ttdconline.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம். எதிர்காலத்தில் மெரினா, கோவளம், நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரம் போன்ற நீலக்கொடி கடற்கரைகளுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.