Loading...
தமிழகத்தில் பருவகால மாற்றத்தால் அதிகரிக்கும் டெங்கு, பன்றிக்காய்ச்சல்: பொது சுகாதாரத்துறை வெளியிட்ட எச்சரிக்கை
தமிழகத்தில் பருவகால மாற்றத்தால் அதிகரிக்கும் டெங்கு, பன்றிக்காய்ச்சல்

தமிழகத்தில் பருவகால மாற்றத்தால் அதிகரிக்கும் டெங்கு, பன்றிக்காய்ச்சல்: பொது சுகாதாரத்துறை வெளியிட்ட எச்சரிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Aug 27, 2026
08:10 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் பகல் நேரத்தில் கடும் வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழைப்பொழிவும் நிலவி வருகிறது. இந்தத் திடீர் பருவநிலை மாற்றத்தின் காரணமாக மாநிலம் முழுவதும் டெங்கு மற்றும் H1N1 பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட பருவகால காய்ச்சல்களின் பரவல் அதிகரித்து வருகிறது. இருப்பினும், நோய்க்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினசரி 100-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதிப்புடன் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இணைந்து வருகின்றனர். இந்த ஆண்டில் இதுவரை 12,543 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 4 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களில் 339 பேர் உட்பட, நடப்பாண்டில் மொத்தம் 1,558 பேருக்குப் பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னேற்பாடு

மருத்துவமனைகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள்

அரசு மருத்துவமனைகள் மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் காய்ச்சல் மற்றும் சுவாச நோய்களுக்கான மருந்துகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

பன்றிக்காய்ச்சலுக்கான மாத்திரைகள் மருத்துவர்களின் ஆலோசனையின்படி நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக கர்ப்பிணிகள், முதியவர்கள், குழந்தைகள் மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

பன்றிக்காய்ச்சல் என்பது உரிய நேரத்தில் சிகிச்சை அளித்தால் எளிதில் குணப்படுத்தக்கூடிய ஒரு நோய் என்பதால், காய்ச்சல், இருமல் அல்லது தொண்டை வலி இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும்.

பொதுமக்கள் அடிக்கடி கைகளைக் கழுவுதல், தும்மும்போதும் இருமும்போதும் கைக்குட்டையைப் பயன்படுத்துதல், போதிய ஓய்வு எடுத்தல் மற்றும் அதிகளவு திரவ உணவுகளை உட்கொள்ளுதல் போன்ற சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

ADVERTISEMENT