டெல்டா விவசாயிகளுக்கு நிம்மதி: பயிர் காப்பீடு செய்வதற்கான அவகாசம் நீட்டிப்பு; தமிழக அரசு அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
டெல்டா மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் சம்பா நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கு விதிக்கப்பட்டக் காலக்கெடுவை, வரும் நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டித்துத் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விவசாயிகளின் தொடர் கோரிக்கைகளை ஏற்று இந்தக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் பருவமழை காலங்களில் இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் மகசூல் இழப்பை ஈடுசெய்யக் காப்பீடு அவசியமாக உள்ள நிலையில், இந்த காப்பீட்டிற்கு விண்ணப்பிக்க முன்னர் சனிக்கிழமை (நவம்பர் 15) காலக்கெடுவாக அறிவிக்கப்பட்டிருந்தது.
சிரமங்கள்
விவசாயிகளின் சிரமங்கள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 3.50 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் சம்பா நெல் சாகுபடி நடக்கிறது. ஆனால், தற்போது கிராம நிர்வாக அலுவலர்கள் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியில் ஈடுபட்டிருப்பதால், கூட்டுறவுக் கடன் சங்கங்களில் ஆவணங்களைப் பதிவு செய்ய முடியவில்லை. மேலும், திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களைப் பதிவு செய்ய முயன்றபோது, சர்வர் கோளாறு காரணமாகச் சரியான நேரத்தில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியாமல் விவசாயிகள் அவதியடைந்தனர்.
கோரிக்கை
அரசுக்கு கோரிக்கை
இதையடுத்து, நெற்பயிர் காப்பீட்டுப் பதிவுத் தேதியை நீட்டிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளில் இருந்து அரசுக்குக் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இந்தச் சூழலில், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, கால அவகாசத்தை இந்த மாத இறுதி வரை நீட்டித்துத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம், இதுவரை காப்பீடு செய்ய முடியாத அதிக எண்ணிக்கையிலான விவசாயிகளுக்குப் பயிர் காப்பீட்டை உறுதி செய்ய வழிவகை ஏற்பட்டுள்ளது.