திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, பொங்கல் கருணைத்தொகையும் அறிவிப்பு
தமிழகத்தில் திருக்கோயில்களின் மேம்பாட்டிற்கும், கோயில் சொத்துக்களை பாதுகாக்கவும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும், திருக்கோயில் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, ஓய்வுபெற்ற அர்ச்சகர்கள், இசை கலைஞர்கள் போன்றவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1000 ஓய்வூதியம், ரூ.3000ஆக உயர்த்தியும், கிராம பூசாரிகளுக்கு வழங்கப்பட்ட ரூ.3000 ஓய்வூதியம் ரூ,4000ஆக உயர்த்தி வழங்க தமிழக அரசு ஆணையிட்ள்ளது. அதே போல், கோயில்களில் மொட்டை அடிக்க காணிக்கை கட்டணத்தை விளக்கி, அப்பணி செய்வோருக்கு மாதம்தோறும் ரூ.5000 ஊக்கத்தொகையாக தமிழக அரசு வழங்கி வருகிறது.
அகவிலைப்படி உயர்வு மற்றும் மிகை ஊதியம் அதிகரித்து தமிழக முதல்வர் உத்தரவு
அரசு ஊழியர்களுக்கு தற்போது அகவிலைப்படி உயர்த்திய நிலையில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு கீழ் ஒருலட்சம் மற்றும் அதற்கு மேலாக வருவாய் பெறும் திருக்கோயில்களில் பணிபுரியும் நிரந்தர ஊழியர்களுக்கு 34%மாக வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி, 38%மாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகை மிகை ஊதியம் வழங்குவது போல், இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு கீழ் இயங்கி வரும் திருக்கோயில்களில் பணிபுரியும் முழு நேர, பகுதி நேர, தினக்கூலி போன்ற அனைத்து ஊழியர்களுக்கும் ரூ.2000 ஆக வழங்கப்பட்டு வந்த பொங்கல் கருணை கொடைத்தொகை ரூ.3000 உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது கோயில் பணியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு, தங்கள் குடும்பத்தோடு பொங்கலை கொண்டாட வழிவகை செய்துள்ளது.